2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி:விஜய்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று விஜய் தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கட்சியின் கொள்கைகள் குறித்து அவர் பேசும்போது, கூட்டணிக்கு வரும் கட்சிகளை ஆதரித்து அக்கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம் என்று கூறினார்.

இது தொடர்பாக மாநாட்டில் விஜய் பேசியதாவது-

மக்களோட மக்களா நாம இனிமேல் களத்தில் தொடர்ந்து நிற்கப் போறோம். பொதுமக்களின் முழு ஆதரவோடு அவர்கள் நம்மை தனிப்பெரும்பான்மையாக ஜெயிக்க வைப்பாங்க என்ற நம்பிக்கை நமக்கு 100 சதவீதம் இருக்கு.

இருந்தாலும், நாம அந்த நிலையை நிறைவாக அடைந்தாலும், நம்மள, நம்ம செயல்பாட்டை நம்பி, நம்மளோட சிலபேர் வரலாம் இல்லையா, அதற்கான அரசியல் சூழல் உருவானால் அப்படி வருபவர்களை அன்போட அரவணைக்க வேண்டும்.

நமக்கு எப்பவுமே நம்மள நம்பி வர்றவங்களை அரவணைச்சு தானே பழக்கம். அதனால நம்மள நம்பி நம்மோட களம் காண வர்றவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026 ஆம் ஆண்டு ஓர் புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. என்று தெரிவித்தார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து விஜய் கொள்கை விளக்க மாநாட்டில் பேசியுள்ளார்.