விஜயின் முதல் அரசியல் மாநாடு… விழாக்கோலம் பூண்டுள்ள விக்கிரவாண்டி…!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் கட்சியின் அரசியல் மாநாட்டையொட்டி, விழாக்கோலம் பூண்டுள்ளது விக்கிரவாண்டி.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு. 85 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுக்காக ஏற்பாடு பணிகளை ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்கொண்டு வந்தனர் தவெக நிர்வாகிகள்.

மாநாட்டு திடலுக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ரிமோட் மூலம், 100 அடி உயரத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றிவைக்கவுள்ளார். கொடியேற்றிய பின்னர், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப்’ மீது நடந்து செல்கிறார். ரசிகர்களாக இருந்தவர்கள் தொண்டர்களாக மாறிய நிலையில், அவர்களை உற்சாகப்படுத்திய பின் மாநாட்டு மேடைக்குச் செல்கிறார் விஜய்.

மாநாட்டு பந்தல் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், 300 மொபைல் கழிவறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

500க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தன்னார்வலர்களுடன், துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் 300 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த பிரமாண்ட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 152 ஏக்கரில் பேருந்துகளையும், 127 ஏக்கரில் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலுக்கு உள்ளே செல்ல 3 வழிகள், வெளியே செல்ல 10க்கும் மேற்பட்ட வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால், மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.