பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவி..!

பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவியாகும். அது தனிநபருக்குரிய சொத்தோ அல்லது குடும்பத்துக்குரிய சொத்தே கிடையாது. எனவே, அந்த உயரிய பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர் – என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை சர்வமத வழிபாடுகளுடன் பாரத் அருள்சாமி (24.10.2024) இன்று ஆரம்பித்தார்.

அதில் முதலாவதாக கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

இவருடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் விஷ்வா, செயற்குழு உறுப்பினர்களான குலேந்திரன், கலாதாரன், உமா மகேஸ்வரி, கிருஷ்னா விஜேந்திரன், சேகர் என பலரும் கலந்துக் கொண்டனர்.

வழிபாடுகளின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் பொதுத்தேர்தலில் இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அதற்கான பிரசாரத்தை இன்று இறையாசியுடன் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளேன்.

கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவதற்குரிய விதையை 2010 ஆம் ஆண்டு எமது தலைவர் மனோ கணேசன் விதைத்தார். அந்த விதைமூலம் 2015 இல் அறுவடை கிடைத்தது. ஆனால் இன்று தமிழ்ப் பிரதிநிதித்துவம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தலைவர் மனோ கணேசனின் நேரடி வழிகாட்டலுடன் தேர்தலில் போட்டியிடுகின்றேன். நிச்சயம் மக்கள் ஆணை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்குரிய கண்டியில் அரசியல் சூழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்.