இந்தியாவை எச்சரித்த பட் கம்மின்ஸ்..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளிடையே பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 2024-25 பார்டர் – கவாஸ்கர் டிராபி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ளது. மேலும் அடுத்த நான்கு போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகியவற்றில் முறையே நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா, இந்த முறை பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல ஆர்வமாக உள்ளது. கடைசி 4 முறை நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவே வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் பிரஸ் ரூமில் பேசுகையில், கடந்த இரண்டு தொடர்களில் ஏற்பட்ட தோல்விகளை திருத்த எங்கள் அணி வீரர்கள் தயாராக உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த போட்டி முடிந்த பிறகு, தற்போது எங்களுக்கு இடைவெளி கிடைத்திருக்கிறது. ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்காக நான் உற்சாகமாக உள்ளேன். கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு அதிக அதிர்ஷ்டம் இல்லை, ஆனால் எப்போதும் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாட பெருமைப்படுகிறோம் என்று கம்மின்ஸ் கூறினார்.

இந்தியாவிற்கு எதிரான தொடர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்தவை. அதிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது எங்கள் மீது எதிர்ப்பார்ப்புகள் அதிகம் உள்ளன. அது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிலிருந்தும் வருகிறது. ஒரு தொடரில் நீங்கள் தோல்வியடைந்தால், அதன் மீது உங்களுக்கு கூடுதல் கவனம் இருக்கும். அப்படித்தான் இதுவும் என தெரிவித்தார்.

குறிப்பாக கடைசி தொடர் மிகவும் கடினமானது. அது கபாபாவில் அந்த கடைசி செஷன் வரை சென்றது. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அதில் வெற்றிபெற முடியவில்லை. அந்த தொடரில் விளையாடியவர்களில் பலர் தற்போதும் அணியில் உள்ளனர். நாங்கள் இந்த முறை அதில் திருத்தம் செய்யப்போகிறோம் என்று கூறினார்.

கடந்த 2021-இல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு, 3 போட்டிகளில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதியுள்ளன. ஆனால் ஒன்றில் மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.