நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் தொலைநோக்கையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய திறமையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. தன்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும். குறுகிய அரசியல் இலக்குகள் அல்லாமல், 220 இலட்சம் மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் உறுதிப்படுத்தும் நாடு உருவாக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தில் போட்டி மனப்பான்மையை விட, ஒன்றுபட்டு அதன்மூலம் அபிவிருத்தியை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்தது. எம்மால் முன்வைக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தெளிவான வேலைத்திட்டத்தில் “எமது நாடு வீழ்ச்சியடைந்துள்ள இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு நாம் வலுவான பொருளாதார வளர்ச்சி வீதத்தை பேண வேண்டும் என்பதையே” இந்நாட்டு மக்களுக்கு எம்மால் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான விடயமாகும். இதன் மூலம், நாடு பெறும் செல்வத்தில் பொருளாதார விருத்தியை நோக்கி பயணிக்கலாம். இந்த பொருளாதார வளர்ச்சி ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியாக அமைய வேண்டும். இதில் நாடு என்ற வகையில் எம்மால் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். அதேபோல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, சேவைத் துறையை மேம்படுத்தி, விவசாயத்தின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (17) ருவன்வெல்ல நகரில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தேர்தல் தொகுதி இணை அமைப்பாளர் நிஹால் பாரூக் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி இல்லாமல் எந்த நாட்டாலும் அபிவிருத்தி காண முடியாது. பொருளாதாரம் வளர்ச்சியடைய மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். கையில் பணம் இருக்கும்போது, சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்ற ஐந்து திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். வாய்மொழியாக கூறுவது போன்று இதை நடைமுறையில் யதார்த்தமாக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உற்பத்தியை அதிகரிக்கவும், வருமான மூலங்களை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இந்த நாட்டில் உற்பத்தித் தொழில்களில் புரட்சி ஏற்பட வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்து காணப்படுகிறது. வறுமை அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்பட்டவில்லை. தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு மீண்டும் அதலபாதாளத்தில் விழக்கூடும். மறுபுறம் ஒரு நாடு என்ற வகையில் 2028 முதல் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இதனை இலக்காகக் கொண்ட அந்நியச் செலவாணி கையிருப்பை அதிகரிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. 2028 ஆம் ஆண்டில் கடனை செலுத்துவதற்கு பொருளாதாரம் விரிவடைய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.