2028 ஆம் ஆண்டிற்கான கடனை அடைப்பதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இங்கு காணப்படும் சம்பிரதாய சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும். இதனோடினைந்த ஊழல் மோசடி மற்றும் திருட்டை ஒழிப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மனித மூலதன மேம்பாட்டுத் திட்டத்திற்கு திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மொரட்டுவை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாண இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், எமது நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். எமது நாட்டின் கடனில் ஒரு பகுதியை செலுத்தும் கால எல்லை 2028 இல் ஆரம்பமாகிறது. பொருளாதாரம் சுருங்கி பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் நிலையில் கடனை 4 வருடங்களில் ஒரே தடவையில் செலுத்த வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவே இது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவே, அன்னிய நேரடி முதலீடுகளை நாம் கவர வேண்டும். அதிக பலன்களை எதிர்பார்த்து வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, இந்தியா, வங்களாதேசம் போன்ற நாடுகளை தெரிவு செய்யாமல் எமது நாட்டை தெரிவு செய்வதற்கான அடிப்படை மாற்றங்களை இங்கு நாம் ஏற்படுத்த வேண்டும். முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நாட்டிற்கு விசேட வேலைத்திட்டமொன்று தேவை. இந்த முதலீட்டு இலக்குகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தாமல் 2028 கடனை அடைக்கும் பணியை தொடங்க முடியாது. எனவே இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, நாட்டின் 220 இலட்சம் மக்கள் குறித்து சிந்தித்து, பொறாமை மற்றும் வெறுப்பு அரசியலில் இருந்து விலகி நல்லதை ஆதரித்து, கெட்டதை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.