இ.தொ.காவிலிருந்து பதவி விலகினார் பாரத் அருள்சாமி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகியுள்ளார்.

பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார்.

மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடையச் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிடத் தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் தன்னால் செயல்பட இயலாது என்பதன் காரணமாக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி 2013ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் மாகாண சபை உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்காக தனது தந்தையும், தானும் அயராது உழைத்தது மாத்திரமன்றி மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால் மாவட்ட பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடந்த தேர்தலில் இ.தொ.காவிற்கு ஆதரவாக வெறும் மூன்று வாரங்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் வாக்குகளை பெற்று மக்களின் நம்பிக்கையை வென்றதாகவும், இம்மாவட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் ஊடாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், அதன் தலைமையை விமர்சித்த தலைமைகளோடு சேர்ந்து தான் தேர்தல் கேட்க தயார் இல்லை எனவும் தெரிவித்தே இப்பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், மக்களின் நலனுக்காகவே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர சில தனி நபர்களின் வளர்ச்சிக்காக மாத்திரமே கட்சி முடிவுகளை எடுக்க கூடாது என்பதினையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளதுடன், கட்சியின் இளைஞர் அணி உருவாக்கம் மற்றும் கட்சியினுடைய சர்வதேச தொடர்புகள், கண்டியில் இ.தொ.காவின் வளர்ச்சியில் தனது அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அதற்கு துணை நின்ற கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.