நடப்பு டி20 உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது கத்துக்குட்டியான அமெரிக்கா அணி.
நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அமெரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய அமெரிக்காவும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அந்த அணியும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 எடுத்ததால் ஆட்டம் டிரா ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது.
விறுவிறுப்பான சூப்பர் ஓவர்…
சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆமிரின் சொதப்பலான பந்துவீச்சாள் அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது. 19 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாட அமெரிக்கா தரப்பில் பந்துவீசினார் சௌரப் நெட்ராவல்கர். சிறப்பாக பந்துவீசிய சௌரப் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சௌரப் ஏற்கனவே இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து இருந்தார். சூப்பர் ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்து இருந்தார்.
விறுவிறுப்பாக சூப்பர் ஓவர் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவ காரணமாக இருந்த சௌரப் நெட்ராவல்கர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர். அத்தோடு மட்டுமல்லாமல் அவர் இந்திய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார் என்ற சுவாரஸ்ய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை பற்றிதான் தற்போது இணையத்தில் வைரலாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.