அம்பாறையில் தமிழ் பிரதிநித்துவத்தை தக்க வைக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும்:செல்வம் அடைக்கலநாதன்

அம்பாறை தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னாரில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்கள்pலும் தமிழ் தேசிய கட்டமைப்பு சர்பாக நாங்கள் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

இந்த வகையில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இந்த தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியின் இணக்கப்பாட்டுடன் செயல்பட முனைந்திருந்தோம்.

கொழும்பில் இக்கட்சியின் செயலாளர் நாயகம் வைத்திய கலாநிதி சக்கியலிங்கம் , புதிதாக தமிழரசுக் கட்சிக்கு தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் தற்பொழுது தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராசா அவர்களோடு சித்தாத்தன் . சுரேஸ் பிரேமச்சந்திரன்  மற்றும் நானும் ஓர் கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தோம்.

அப்பொழுது வைத்திய கலாநிதி ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதாவது திருகோணமலையில் வீட்டுச் சின்னத்திலும் அம்பாறையில் எங்கள் சின்னத்திலும் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது இதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இதை தமிழரசுக் கட்சியினர் தங்கள் மத்திய சபையில் முடிவெடுத்து தெரிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதன் பின்பு திருகோணமலையில் ஆயர் அவர்களும் பொது அமைப்புக்களும் அங்கு பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும் வகையில் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமையவும் நாங்கள் அங்கு வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது என ஒப்புதலை வழங்கியிருந்தோம்.

ஆனால் அம்பாறையை பொறுத்தமட்டில் கடந்த முறை கருணா இங்கு போட்டியிட்ட காரணத்தினால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்ட மக்களாக காணப்படுவதால் இம்முறை அம்பாறையின் நிலைப்பாடு பற்றிய தகவலை தமிழரசுக் கட்சி இன்னும் எங்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்து வருகின்றது.

சுமந்திரன் அவர்கள் சங்கு சின்னத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுவதால் தமிழரசுக் கட்சி எங்களுடன் இந்த விடயத்தில் இணைந்து வருவதை தட்டிக் கழிக்கின்றார்கள்.

அம்பாறை மக்களின் உணர்வை இலங்கை தமிழரசுக் கட்சி உணர்ந்து செயல்பட வேண்டும். நாங்கள் திருமலையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தது போல எமது அம்பாறை தமிழ் மக்களின் உணர்வை உணர்ந்து தமிழரசுக் கட்சி செயல்பட வேண்டும்.

தமிழரசுக் கட்சி தேசியம் இன ஒற்றுமையைப் பற்றி பேசுகின்றார்கள் ஆனால் அம்பாறை விடயத்திலும் இவர்களின் செயற்பாட்டால் இன்னும் ஐயப்பாடு இருந்து வருகின்றது என இவ்வாறு தெரிவித்தார். 

(வாஸ் கூஞ்ஞ)