வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோள்!-
வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது இங்கு வாழும் மக்களின் நலன்களுக்காகவே செயற்படுவதாக வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 14 இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைவின் அவசியம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வூடகச் சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
அந்த அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இலங்கை தேசத்துக்கும்,சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைப் பிரகடனப்படுத்தியிருந்தது.
அதில் வடக்குக் கிழக்கிலே கடந்த 76 வருடங்களாக புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சனைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிகாரப் பகிர்வு எமக்கு வழங்கப்பட வேண்டுமென்றே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அந்த அடிப்படையில் காலத்துக்கேற்ற வகையில் தீர்வினைப் பெற்றுக் கொள்ள பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை முன்வைப்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டுமென ஊடகச் சந்திப்பு மற்றும் பல்வேறு மக்களைச் சந்தித்துத் தெளிவூட்டியிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய அரசாங்கமானது எதிர்வரும் நவம்பர் 14 இல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வர்த்தமானியூடாக வெளியிட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இப்பொதுத் தேர்தல் வடகிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவமானது.
அத்தோடு பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க கட்சிகள் முன்வர வேண்டும்.
எனவே எமக்கான பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் பொருட்டு அனைத்துக் கட்சிகளும் ஓரணியின் கீழே பயணிக்க முன்வர வேண்டுமென்றார்.
இச்சந்திப்பில் அமைப்பின் உறுப்பினர் ஜெயராமன் கோபிநாத் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான கலைவாணி தயாபரன்,துரையப்பா காந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக அறிக்கை வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.