சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. காலை 11 மணிக்குத் துவங்கிய சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு லட்சக்கணக்கானோர் குவிந்த சூழலில், நிகழ்ச்சியைக் கண்டுகளித்துவிட்டு திரும்பிய மக்கள், கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
மேலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் என்பவரும் மயக்கமடைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிண்டி மடுவங்கரையைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.