இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசிய இன பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு கூட்டாக அழைப்பு .
யாழில் இன்றையதினம் (04.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிக்கை வெளியிடப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில், “இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டுவரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம்.
சமஸ்டி முறையிலான தீர்வு
ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கின்றோம். இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத்தினராவோம். எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை சமஷ்டி முறைமையின் மூலம் உறுதிசெய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர்.
எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர். எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயற்படுவோம்.
இதற்காக, அனைவரும் ஜனநாயக வழிநின்று செயற்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும். இந்நிலையில் இலங்கை அரசானது எதிர்வரும் 2024ம் ஆண்டு கார்த்திகை மாதம்14ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் எமது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது தமிழ் தேசியப் பரப்பிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் தலைமைகளுக்கு ஓர் பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கிறது.
தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்
இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போகும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், கட்சி ரீதியாக தனித்து போட்டியிடாமல் ஓர் கூட்டாக அல்லது கூட்டணியாக தேர்தலில் போட்டி இட்டு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே அதிக மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்று எமது தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை வேண்டி, இலங்கை தேசத்திற்குள்ளும் சர்வதேச ரீதியாகவும் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.
தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக இணையாத சந்தர்ப்பத்தில் வாக்குகள் சிதறப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன், குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டி நேரிடும் என்பதனையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்“ என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வடமாகாண இணைப்பாளர் பிகிராடொ உட்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.