பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம்..!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்கள் இப்பணியில் ஈடுபட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அந்தப் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டோபர் மாதம் முழுவதும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களைச் சந்தித்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த வேலைத்திட்டம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் எவ்வித கட்டணமுமின்றி ஒக்டோபர் மாதம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.