முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை சிறப்பாக ஆரம்பம்!

இந்துக்களால் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படும் பூஜையில் நவாரத்திரி முக்கியமானதொன்றாகும்.

அந்தவகையில், நவராத்திரி பூஜை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (03) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்றைய முதல்நாள் பூஜை வழிபாடுகள் தாபனக் கிளையினரால் நடாத்தப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக மண்டபத்தில் மாவிலை, தோரணங்கள், வாழை மரங்கள் என்பவற்றால் வழிபாட்டிடம் மங்களகரமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலும் வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான இலட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் எழுந்தருளச் செய்யப்பட்டு, நவதானிய பூரண கும்பம் வைக்கப்பட்டு, பூஜை வழிபாடுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

குறித்த பூஜை வழிபாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் (நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெயக்காந்(காணி), மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளை தலைவர்கள், உள்ளிட்ட அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று ஏனைய எட்டுநாட் பூஜைகளை ஏனைய கிளையினரும், தொடர்ந்து இறுதிநாட் பூஜையினை அனைத்து ஊழியர்களின் ஏற்பாட்டிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி விரதத்தை அனுஸ்டிப்போருக்கு விரும்பியது ஈடேறும் என்பதுடன் முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.