கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டமானது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் (02) புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் :
வடகீழ் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், “வருமுன் காப்போம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் இன்றைய தினம் கூட்டப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஏழாம் மற்றும் எட்டாம் தினங்களில் இவ்வேலை திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக இதனை கட்டுப்படுத்த முடியாது. இதனூடாக விழிப்புணர்வினை சமூகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் குறித்த சில திணைக்களங்களுக்கு மட்டும் உரியதல்ல. சகலரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி Dr க.றஞ்சன் அவர்களால் டெங்கு நோய்தாக்கம் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.
தொடர்ந்து, வடகீழ் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மாவட்டத்தின் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முக்கிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்காக பிரதேச செயலக ரீதியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் 7ம் திகதி அன்று மாவட்டத்தின் அனைத்து அலுவலகங்களிலும் தொடர்ந்து, 8ம் திகதி பொது இடங்களில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து டெங்கு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் முகமாக சிரமதான நடவடிக்கைகளை பரவலாக முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இத்தனைவிட மாவட்டத்தில் கடந்த காலங்களில் டெங்கு பரவிய விதம், டெங்குவை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மழைக்காலம் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து வாராந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பது பற்றியும் பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி), கரைச்சி பிரதேச செயலாளர், சுகாதார திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள், துறைசார்ந்த திணைகளங்களின் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதர்கள், உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.