மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துடன் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இணைந்து நடாத்திய புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
புற்றுநோய்க்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விழிப்புணர்வு நடைபவனியானது மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை அடைந்து அங்கிருந்து காந்தி பூங்காவை வந்தடைந்தது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் விஷாந்த, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்ஜனி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், புற்றுநோய் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஸ்ரீநாத், வர்த்தக சங்க தலைவர் தேசபந்து எம்.செல்வராசா உள்ளிட்ட சமூக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பயிற்சி மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டர்.
இதன் போது சமூகத்தை விழிப்புணர்வூட்டும் வண்ணமான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு, துண்டுப் பிரசுர விநியோகமும் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் போது விசேடமாக மார்பக புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.