காசாவிற்கு எதிரான போரில், ஹமாஸிற்கு, ஈரான் மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக இஸ்ரேல் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குல் நடத்தியது. இதில், ஈரானை சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததால், ஈரான் கடுங்கோபம் அடைந்தது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரான், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இஸ்ரேலை நோக்கி 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இதன் மூலம், தங்களை சீண்டினால் நேரடியாக தாக்குவோம் என ஈரான் சுட்டிக்காட்டிய நிலையில், சிறிது நாட்கள் இஸ்ரேல் அமைதி காத்தது. ஆனால், கடந்த மே மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளை எழுப்பியது.
இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் பொறுப்பேற்ற நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர்கள் டெஹ்ரானில் கொல்லப்பட்டனர். அதற்கு சில மணிநேரத்திற்கு, முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஃபுஆத் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார்.
இதன் மூலம், 24 மணிநேரத்தில், ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவரையும், லெபனானில் ஹிஸ்புல்லா தலைவரையும் தாக்கி இஸ்ரேல் தனது பலத்தை காட்டியது.
இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்-ஹிஸ்புல்லா இடையே தாக்குதல் பல்வேறு வகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.
குறிப்பாக, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் வெடித்தது, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடுத்தது என இஸ்ரேல் உக்கிரமாக இறங்கியது. இந்நிலையில், கடந்த வாரம் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையின் தளபதி அபாஸ் நில்ஃபோராஷன் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா லெபனானில் கொல்லப்பட்டனர்.
இதனால் அத்திரம் அடைந்த ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான அயதோல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தங்களது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது அரசியல் ரீதியான அவமானமாக கருதியதால், ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக பிபிசி தமிழ் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வாதத்தில் இருந்து மிதவாத போக்கிற்கு மாறும் ஈரானை, இஸ்ரேல் மறைமுகமாக சீண்டி போரின் பாதைக்கு கொண்டு வந்ததாக பேராசிரியர் கிளாட்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட போது, ஈரான் சிறிது நாட்கள் அமைதியாக இருந்ததால், இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதே நிலை, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட பிறகும் இருக்கக்கூடாது என்பதால், ஈரான் உடனடியாக நேரடி தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக கருதப்படுகிறது. ஹமாஸிற்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது ஈரான் பக்கம் திரும்பியதால், அதன் போக்கை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.