விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தில் பான் இந்தியா நடிகர் இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ரசிகர்கள் தற்போது வைரலாக்கியுள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்துள்ளது. நாளை மறுதினம் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி கோட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக எச்.வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பெங்களூருவை மையமாக கொண்ட கே.வி.என். புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தி கோட் படத்திற்கு விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கு ரூ. 275 கோடி வரை பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது இந்த படத்துடைய ப்ரீ புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில்தான் இந்த படத்துடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் மற்றும் நடிகைகளின் அறிவிப்பு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் சில மணிநேரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது. இந்நிலையில், அனிமல், கங்குவா படங்களில் வில்லனாக மிரட்டியுள்ள பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் தளபதி 69 படத்தில் இடம்பெறுவார் என பட தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தி திரையுலகில் நன்கு அறியப்பட்ட பாபி தியோல் சமீபத்தில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தில் வில்லனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்திலும் பாபி தியோல்தான் வில்லனாக நடிக்கிறார். பான் இந்தியா நட்சத்திரமாக அறியப்படும் பாபி தியோல் தளபதி 69 படத்தில் இடம்பெற்றிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.