சிறுவர்களுக்கு சிறந்ததோர் உலகத்தை உருவாக்குவதற்காக பாடுபடுவோம்..!!

“போட்டித்தன்மையான வாழ்க்கை முறையினாலும் கல்வி முறையினாலும் நாம் அனைவரும் பல பாடங்களை தவறவிட்டுள்ளோம்”

சிறுவர்களுக்கான சிறந்ததோர் உலகை உருவாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதொரு நாட்டை உருவாக்குதவற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் களனி நாகாநந்தா சர்வதேச பௌத்த கல்வி நிறுவனத்தில் இன்று (01) இடம்பெற்ற ’தவறவிட்ட பாடம்’ எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

எமது நாட்டில் மறக்கப்பட்ட மற்றும் தவறவிடப்பட்ட பல பிரச்சினைகள் உள்ளன. போட்டி நிறைந்த உலகில், மனிதகுலம் பல முக்கியமான விடயங்களை விட்டுவிட்டு தனியாக ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எமது பிள்ளைகளின் கல்வி முறை மற்றும் முதியவர்களின் பொருளாதாரம் போன்ற பல விடயங்கள் இதனைப் பாதித்துள்ளது.

அந்த தவறவிடப்பட்ட பாடங்களில் நமது மனித குலத்திற்கு இன்றியமையாத பல விடயங்கள் உள்ளன: ஒருவருக்கொருவர் அக்கறைகாட்டுதல், பாதுகாப்பு, ஒற்றுமை, அன்பு, மரியாதை, மற்றவர்களைப் புரிந்துகொள்வது, சுக துக்கங்களில் பங்கெடுத்தல், முதியவர்களுடன் நடந்துகொள்ளும் விதம், முதியவர்களை பராமரித்தல், நாம் வாழும் சூழல் மற்றும் அதில் உள்ள விலங்குகளை பராமரித்தல் உட்பட பல விடயங்கள் நாம் தவறவிட்ட பாடங்களாகும். நாம் அனைவரும் இதையெல்லாம் விட்டுவிட்டு மிகவும் போட்டி நிறைந்த ஒரு வாழ்க்கை முறையை முன்னெடுத்து வருகிறோம். இந்த விடயங்களுக்குப் பொறுப்பானவர்கள் சிறுவர்களாகிய நீங்கள் அல்ல பெரியவர்களான நாங்களே என்பதை கவலையுடன் சொல்ல வேண்டியுள்ளது. பெரியவர்களான நாமே சிறுவர்களுக்கு மிகவும் கடினமான, போட்டி நிறைந்த ஒடுக்குமுறையான வாழ்க்கையை உருவாக்கியவர்கள். அதை நாம் மாற்ற வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் உறுதிபூண்டுள்ளோம்.

உங்களுக்குள் இருக்கும் மானிடப் பண்புகளை மேம்படுத்தி உங்களுக்கான சிறந்த சூழலை கட்டியெழுப்புவதே எங்கள் நோக்கம். இந்த உலகத்தை நாம் மாற்றுவோம். பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன. அந்தப் பாடங்களைக் கற்றுக் கொள்வோம். இந்த உலகத்தை மிகவும் அழகான இடமாக, பாதுகாப்பான நாடாக, வளமான நாடாக, பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த உலகத்தை உருவாக்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். பிள்ளைகளிடம் உள்ள மனிதப் பண்புகளை வளர்ப்பதில் உள்ள தடைகளை நீக்கி அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் உலகத்தை உருவாக்குவது எமது பொறுப்பு. அவர்களுக்கான புதிய உலகத்தை உருவாக்க நாங்கள் தலையிடுவோம். இந்த நாட்டை நாம் மாற்றுவோம். இந்த உலகத்தை நாம் மாற்றுவோம். அந்த விடயத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்திருங்கள். “என்றும் தெரிவித்தார்.

இந்த செயலமர்வுக்கு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர, சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.