இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
நெடுந்தீவு கடற்பரப்பின் தென் பகுதிக்கும் தலைமன்னார் கடற்பரப்பின் வட பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 55 இந்திய மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம்மாதம் 21ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 3 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.