ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
‘அயலான்’ படத்துக்குப் பிறகு ரவிக்குமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் உள்ளது. ‘அயலான்’ படப்பிடிப்பின் போதே சூர்யாவை சந்தித்து கதையொன்றை கூறியிருந்தார் ரவிக்குமார். இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், அந்தக் கதையில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.
தற்போது ரவிக்குமார் இயக்கவுள்ள படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘மகாராஜா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி கால்ஷீட் ஒன்று பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. இதனால் ரவிக்குமார், விஜய் சேதுபதி இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும் என கருதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இது சூர்யாவுக்கு சொன்ன கதையா, அல்லது புதிய கதையா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், பாண்டிராஜ் படத்தினை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தினை தொடங்கலாம் என முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.