இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மாத்தளை தேவஹுவ கிராமத்தில் பிறந்தார்.
திசாநாயக்க முதியன்சலாகே ரன்பண்டா மற்றும் திசாநாயக்க முதியன்சலாகே சீலாவதி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
திஸாநாயக்க குடும்பத்தில் இரண்டாமவராக இருந்த அனுர, தனது அடிப்படைக் கல்விக்காக தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் பயின்றார்.
சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இவர் உயர்தரக் கல்விக்காக தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் நுழைந்தார்.
அங்கு விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்து 1992 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.
1987 ஆம் ஆண்டு பாடசாலை மாணவராக இருந்தபோது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக சோசலிச மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளராக இருந்த அனுர, பல்கலைக்கழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகராக மாறினார்.
அங்கு மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த சோசலிச மாணவர் சங்கத்தை கட்டியெழுப்பிய அநுர பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் “அரவிந்த” என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.
மேலும், அவர் களனி பல்கலைக்கழக பௌத்த சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
அநுரகுமார திஸாநாயக்க தனது உயர்கல்வியை முடித்து 1995 இல் விஞ்ஞானப் பட்டதாரியாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்.
1997 இல், அவர் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அனுரவின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.
அதன் பின்னர் ஒரு வருடத்தின் பிறகு 1998 ஆம் ஆண்டு அனுரகுமார ஜே.வி.பி.யின் அரசியல் சபையில் இணைவதற்கான வரம் கிடைத்தது.
பின்னர் அவர் 2000ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினார்.
அந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு நுழைந்தார்.
2004 ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிக விருப்பு வாக்குகளை பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக கடமையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னோடியாக திகழ்ந்தார்.
2014 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் பயணம் மிக முக்கியமான கட்டத்திற்கு சென்றது.
அன்று ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் சோமவன்ச அமரசிங்கவிடமிருந்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு மாற்றப்பட்டது.
அனுரகுமார திஸாநாயக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது.
அதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 418,553 வாக்குகளைப் பெற்று 3.16% வாக்கு சதவீதத்தைப் பெற்றார்.
பின்னர் 2021 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேசிய மாநாட்டில் அனுர, தேசிய மக்கள் சக்தியின் தலைவராக நியமிக்கப்பட்டார்
அதன் பின்னர் அநுரகுமார திஸாநாயக்க, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கங்கங்களின் அடிமட்டத்திற்கே சென்று அதன் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தி மக்களுக்கு தௌிவுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் களமிறங்கினார்.
“வளமிக்க நாடு – அழகிய வாழ்வு” என அநுர நாட்டின் முன் வைத்த கொள்கைப் பிரகடனத்திற்கு மக்களின் சம்மதம் கிடைத்த பின்னர் அதனை நனவாக்கும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.