ஐனாதிபதி தேர்தல் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: கனகேஸ்வரன் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவிப்பு.

நாளையதினம்( 21.09) சனிக்கிழமை,நடைபெறவுள்ள  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும்,சுதந்திரமாகவும் நடை பெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.09) பிற்பகல்  2.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.”

“இன்றைய தினம் (20.09),வெள்ளிக்கிழமை,மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து, மாவட்டத்தின் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.”

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.”

வாக்கு எண்ணும் நிலையமான மாவட்டச் செயலகப்  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64 பொலிஸாரும்,47 விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் தேர்தல் முறைப்பாட்டுப்  பிரிவுக்கு 11 பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.”

“மேலும் 98 வாக்களிப்பு நிலையங்களிலும் 2 பொலிஸார் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்து வரும் போது பொலிஸார் வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.”

“தேர்தல் வன்முறைகள் குறித்து எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.சாதாரண சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 28 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றது.குறித்த முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வும்  வழங்கப்பட்டுள்ளது.”

“வாக்காளர்களில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.விழிப்புலனற்றோர், தங்களுக்கு தெரிந்த ஒருவரை அழைத்துச் சென்று வாக்களிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பின் போது மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்  ஆணையாளர்  வி.சிவராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

____________________________________

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலைங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21.09) காலை இடம்பெறவுள்ள நிலையில்,

மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாகச்  செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தின் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில்  90 ஆயிரத்து 607 வாக்காளர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ