விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா.
தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. குறிப்பாக தான் மைனராக இருந்தபோதே அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தற்போது 21 வயதை எட்டியுள்ள பெண் நடனக் கலைஞர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த புகாருக்குப் பின்னர், ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. இந்நிலையில் நேற்று (19) ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் பெங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர்.
ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண், அவருடைய குழுவில் இருந்து விலகி நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர் மிகவும் தைரியமாக ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி மாஸ்டர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக என புகார் அளித்துள்ளார்.
ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது.