இந்திய அணியை மீட்டெடுத்த அஸ்வின் – ஜடேஜா பார்னர்ஷிப்!

சென்னையில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, கில், விராட் கோலி, உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினாலும் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் நங்கூரமிட்டு இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா ஒரு முனையில் நிலைத்து விளையாட, மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 109 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் 6-ஆவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதுவரை 90 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள தோனி, 6 சதங்களை அடித்துள்ளார். அஸ்வின் இந்த சாதனையை தனது 101-ஆவது டெஸ்ட் போட்டியில் சமன் செய்துள்ளார். இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 376 ஓட்டங்களை பெற்றது.

ரவிச்சந்திரன் அஷ்வின் 113 ரவிந்திர ஜடேஜா 86