பெண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த இரண்டு பிரிவினரையும் இரண்டாகப் பிரிக்காமல் ஒன்றாக செயல்படுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக பெண்களுக்கான புதிய வேலைத் திட்டத்தை நாட்டிற்கு வழங்குவோம். பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான உரிமை அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை விசேடமாக அரசியல் யாப்பில் குறிப்பிட்டு அதனை அடிப்படை உரிமையாக மாற்றுகின்ற யாப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வருவோம். அதன் மூலம் சிறுவர்களுக்கும் பெண்களுக்குமான விசேட வரவேற்பும் கௌரவமும் மரியாதையும் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு, பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான உரிமையை அதிஉயர் சட்டமாக மாற்ற வேண்டும் அதற்காக விசேடமான ஜனாதிபதி செயலணி ஒன்றை நிச்சயமாக நிறுவுவோம். மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நாட்டின் தலைவர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் விடயங்கள் குறித்து நேரடியாக பொறுப்பேற்று, பொறுப்பு கூறக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்ற, மேற்பார்வை செய்கின்ற பின்னூட்டல்களை பெறுகின்ற விடயங்களை கையாள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய பெண்கள் சக்தி மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் (17) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச அறிக்கைகளுக்கமைய எமது நாட்டிலும் 60 – 70 வீதமானவர்கள் பன்முக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக எமது சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் அசௌகரியமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சமமான அந்தஸ்திற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கும் வேலைத் திட்டத்தின் ஊடாக 24 மாதங்களுக்கு ஐந்து விதிமுறைகளின் கீழ் குடும்பப் பெண்களை மையமாகக் கொண்டு மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
☎ பெண்களுக்கான புதிய சட்ட விதிமுறைகள்.
இன்று பெண்கள் பல சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் வீடுகளிலும், தொழில் நிலையங்களிலும், வீதிகளிலும், பெண்கள் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். அதற்காக எமது நாட்டில் உள்ள சட்ட கட்டமைப்பை உறுதிப்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்முறையை முற்றாக ஒழிக்க வேண்டும். எனவே தற்போது காணப்படுகின்ற சட்டத்தை நவீன காலத்துக்கு பொருத்தமான முறையில் வலுப்படுத்தி, புதிய சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
☎ மாதவிடாய் கால ஆரோக்கியத் துவாய்களை வழங்குவோம்.
பெண்கள் எதிர்கொள்ளும் பெருமளவான உடற்சுகாதார பிரச்சினைகள் இருக்கின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலின் போது இதுகுறித்து தான் கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் தன்னை பல விதங்களிலும் இம்சித்தார்கள். ஆனாலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இது குறித்து நாம் குரல் எழுப்பினோம். அதன் பிரதிபலனாக தேர்தல் காலங்களிலும் சரி முறையான வேலைத்திட்டமாக பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் ஆரோக்கியத் துவாய்களை இலவசமாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்கொட்லாந்தை போன்று எமது நாட்டிலும் பெண்களுக்காக இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக பெண்களுக்கான இந்த வசதிகளை நாம் இலவசமாக பெற்றுக் கொடுப்போம் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
☎ இல்லத்தரசிகளை வலுப்படுத்தி பொருளாதாரத்திற்கான பங்களிப்பை பெற்றுக் கொள்வோம்.
வங்குரோத்து தன்மையிலிருந்து மீட்சி பெறுவதற்காக பொருளாதார சுருக்கத்தின் மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்திருந்தாலும், பொருளாதார விருத்தியின் மூலமாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நம்புகின்றது. வீடுகளுக்கான வருமானத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாக அமைவது இல்லத்தரசிகளுக்கு வீடுகளில் இருந்து கொண்டே சுய தொழில் ஊடாக வருமானம் ஈட்டுவதாகும். அதற்காக பெண்களை வலுவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
☎ நுண்நிதி கடன் மோசடிக்கு தீர்வு.
நுண்நிதி கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்ட இலட்சக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். அந்த மோசடிகளிலிருந்து பெண்களை காப்பாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். எமது நாட்டில் தேசிய போசனைக் கொள்கை திட்டத்தை செயற்படுத்தி கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் போசனை சக்தியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவை வழங்குவது தேசிய பொறுப்பாகும். ஆரோக்கியமான பிரஜைகள் என்பது நாட்டின் உற்பத்திக்கான பெரும் பங்களிப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
☎ பெண்கள் பணிப்படை அணியை அதிகரிக்க வேண்டும்.
பணிப்படையில் பெண்களின் பங்களிப்பு 33% காணப்படுகின்றது. அதனை 45 வீதம் வரை அதிகரிக்க வேண்டும்। மகப்பேற்று விடுமுறை சலுகைகளை அரசாங்கம் பின்பற்றுவதன் ஊடாக பெண்கள் பணி படையணியின் ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும். எனவே அதனை செயற்படுத்துவதன் ஊடாக பணிப்படை அணியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
☎ பெண்களுக்கான சுயாதீனானை ஆணைக்குழு.
அத்தோடு பெண்களுக்கான சுயாதீன தேசிய ஆணை குழுவொன்று காணப்படுகின்றது. அதனை வலுப்படுத்தி சட்டத்தையும் விதிமுறைகளையும் கொள்கைகளையும் முறையாக செயல்படுத்துவோம். பெண்களின் கல்வியை அவர்களுக்கான பயிற்சியும் கொடுத்து வலுப்படுத்துவோம். அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை முன்னெடுத்துச் செல்வோம். பால் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.