பொலிஸாரின் பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக கடந்த கால நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மீண்டும் சமூக ஊடகங்களில் ஒலிபரப்புதல் மற்றும் அவ்வாறான வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என  இலங்கை பொலீஸார் ஊடகங்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். 

நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு காலப்பகுதிகளில் இடம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்பான வீடியோக் காட்சிகளை ஊடகங்களில் இந்த நாட்களில் அடிக்கடி ஒளிபரப்பு செய்யும் சந்தர்ப்பத்தை காணக் கூடியதாக உள்ளது என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உதாரணத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையம் வரை பயணிக்கும் வாகனங்கள் பல்வேறு நபர்களால் பரிசோதனை செய்யப்படுதல், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றை இப்போது சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான வீடியோ காட்சிகளை  அவ்வாறே சமூக ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்வதனால் தவறான எண்ணங்கள் சமூக மயப்படுத்தப்படுவதுடன் பழைய சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் நடப்பு விவகாரங்களாக பிரச்சாரம் செய்யப்படுகின்றமை பொதுமக்களை தவறான வழியில் கொண்டு செல்கின்றது.

இதனால் நாட்டில்  சட்டம் மற்றும் பொதுமக்களின் சமாதானத்தின் பாதுகாப்பில் நேரடியாக இடையூறு விளைவிக்கலாம் மற்றும் உண்மைகள் தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத இவ்வாறான உணர்வுபூர்வமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுதல் மற்றும் பகிர்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவ்வறிவித்தலில் பொலீஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.