வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து எதிர்காலத்தை இருளாக்கிவிடாதீர்கள்

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மிக வேகமாக முன்னேறிய ஒரே நாடு இலங்கை என்பதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு புரட்சியை செய்ததன் மூலம் அடுத்த 05 வருடங்களில் நிச்சயமாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, ‘வாய்ப்பு’ கேட்கும் அரசியல்வாதிகளிடம் தமது எதிர்காலத்தை ஒப்படைத்து, நாட்டையும் எதிர்காலத்தையும் இருளடையச் செய்ய வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மினுவங்கொடையில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகையில், இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக 03 பிரதான அரசியல் கட்சிகள் நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன. சஜித்துக்கு வழங்கப்படும் வாக்கு, அநுரவுக்கு தட்டில் வைத்து வழங்கும் வாக்காகும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, அதேபோன்று நாமலுக்கு அளிக்கப்படும் வாக்கும் அநுரவுக்கு தட்டில் வைத்து வழங்கும் வாக்கு என்பதை பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”செப்டம்பர் 21 உங்களுக்கு மிக முக்கியமான நாள். 2022 இல் இந்த நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியது. உணவு, மருந்து, எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். உணவோ உரமோ இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்தது. அப்போது அரசியலும் சரிந்தது. பிரதமரும் அமைச்சரவையும் இராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.

ஆட்சியைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஓடிவிட்டார். இந்த அரசாங்கத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக தெரிவித்தார். முன்னாள் விவசாய அமைச்சர் அனுர குமார திஸாநாயக்கவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உங்கள் துன்பம் அவர்களுக்குப் புரியவில்லை. மக்கள் துன்பப்படும் போது தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அந்த நேரம் அவர்கள் ஓடினர். எனக்கு ஆதரவு வழங்க இணைந்த குழுவுடன் நாட்டைப் பொறுப்பேற்று பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வந்தேன். இப்போது சிலர் ‘வாய்ப்பு’ கேட்கிறார்கள்.

இந்த நபர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க, செப்டம்பர் 21 அன்று உங்கள் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைப்பீர்களா என்று மக்கள் சிந்திக்க வேண்டும். திசைகாட்டிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க, உங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைக்க வேண்டுமா என்று நான் கேட்கிறேன்.

கடந்த பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிரமமாக இருந்தாலும் அந்த முடிவுகளை எடுத்தோம். அந்த துன்பத்தை இந்நாட்டு மக்கள் சகித்தார்கள். தெருவில் இறங்கி கூச்சல் போடவில்லை. அந்த சக்தி மக்களிடம் இருந்தது. அதனால்தான் இந்த நாட்டு மக்களை நான் மதிக்கிறேன்.

அப்போது சஜித்தும், அனுரவும் எங்கிருந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டோம். ஆனால் அவர்கள் உதவவில்லை. தேர்தலை நடத்துமாறு கேட்டனர். போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டனர். நீதிமன்றம் சென்றனர். அப்படிப்பட்ட ஒரு குழுவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா என்று கேட்கிறேன்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை நாம் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாம் முன்னேற வேண்டும். அடுத்த 05 ஆண்டுகளில் மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இன்று வரலாற்றில் முதல் தடவையாக 03 பிரதான கட்சிகள் நாட்டு மக்களுக்காக ஒன்றிணைந்துள்ளன. ஆனால் சஜித்தும் அனுரவும் அதில் இணைய விரும்பவில்லை. இந்த பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது.

மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வேகமாக வளர்ந்து வரும் நாடு இலங்கை என்பதை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த 05 ஆண்டுகளில் அனைவரும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். செப்டம்பர் 21 ஆம் திகதி அந்த ஆணையை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.