-பதுளையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு –
ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பதுளையில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான், ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதுளை மாவட்டத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு ,கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் ரணிலுக்கு ஆதரவு வலுப்பெற்று வருகிறது.கடந்த ஒரு வார காலத்தில் செல்லும் இடமெல்லாம் ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவு வலுப்பெற்றுள்ளது. அதற்கான காரணத்தை ஆராயும் பொழுது, மக்களால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பிறகு கேஸ், பெட்ரோல் வரிசையில் மீண்டும் நிற்க முடியாது எனவும் தாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பதுளை மாவட்டத்தில் ரணிலின் வெற்றி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குளை பெற்று வெற்றி பெற உறுதி செய்யப்பட்டுள்ளது.பதுளை மாவட்டத்தில் சேவை செய்த அனைவரும் இந்த மேடையில் அமர்துள்ளோம். சேவை செய்யாதவர்கள் எதிர் தரப்பினருடன் அமர்ந்துள்ளனர்.மக்களை பொறுத்த மட்டில் சேவை செய்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது.
நான் ரணில் விக்கிரமசிங்கவிற்காக பிரச்சாரத்திற்காக வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் சென்றுள்ளேன். அவருக்கான ஆதரவு அதிகமாகவே உள்ளது.
ஜனாதிபதியின் வெற்றிக்கு பின்னால் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மலையக மக்களும் உள்ளனர். அதே போல தேர்தலுக்கு பின் மலையக மக்களின் வெற்றிக்கு பின்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.