நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்..!

  • என்மீது ரணில் – ராஜபக்ஷ என்று குற்றம் சாட்டப்பட்டாலும், ஐ.தே.க கொள்கைகளை நானே பாதுகாத்தேன்.
  • உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் எம்மோடு இணைய வேண்டும்
  • கோட்டாபயவிற்கு வாக்களித்த மக்களின் தீர்வு, திசைகாட்டிக்கு வாக்களிப்பது அல்ல:

நாட்டை வெல்ல ஒன்றுபடுவோம்!

  • இரத்தினபுரியில் ஜனாதிபதி தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மாற்றத்திற்காக’ மக்கள் ஆணையைக் கோரவில்லை என்றும் மாறாக நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஏற்றுமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல், பசுமை மற்றும் அறிவு சார் பொருளாதாரத்தின் ஊடாக பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் சமூக நீதி ஆணைக்குழுவை உருவாக்குதல் ஊடாக சமூக புரட்சியை ஏற்படுத்தவும் பெண்களை வலுவூட்டுதல் மற்றும் ஊழலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துதல், மாவட்ட அபிவிருத்தி சபைகள் மற்றும் மக்கள் சபைகளை உருவாக்குவதன் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து அரசியல் புரட்சியை அடுத்த 05 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரத்தினபுரியில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு மிகுந்த உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடு நெருக்கடியில் இருக்கும் போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது ஆரம்பமுதலே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாக உள்ளதாகவும் அதனை கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தமது தலைவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சியின் பிரகாரம் அந்தக் கொள்கையை தான் பின்பற்றியதாகவும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த மக்களுக்கு நாடு முகங்கொடுத்த நிலைமையினால் வெறுப்படைந்திருப்பர் எனவும், திசைகாட்டிக்கு வாக்களிப்பது அதற்கு பரிகாரமாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டை வெல்லவைப்பதற்கு தம்முடன் ஒன்றிணைவதே தீர்வு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய போதும், அந்தக் கட்சியைத் சேர்ந்த பெரும்பான்மையானோர் நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பங்களித்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”நாடு பிரச்சினையில் இருக்கும் போது ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஐக்கிய தேசியக் கட்சி நீண்டகாலமாக பின்பற்றி வந்த பண்பு. அந்தக் கொள்கைகளைப் பின்பற்றியதற்காக என்னை ரணில் ராஜபக்ச என்று நான் குற்றம் சாட்டினர். பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையினர் என்னுடன் இருந்தனர். ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலர் எதிரணிக்கு சென்றார்கள். அதற்காக நாங்கள் சஜித் – பீரிஸ் என்று அவரைக் கூறவில்லை. நாட்டைப் பற்றி சிந்தித்துத் தான் நாம் செயற்பட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சிக்கு அமைய நான் செயற்பட்டேன். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளோம். நாம் அனைவரும் இணைந்து நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கினோம்.

பொருளாதாரம் சரிந்த நாட்டை, இறக்குமதிக்குக் கொடுக்க அந்நியச் செலாவணி இல்லாத நாட்டை இரண்டாண்டுகளில் மீட்க முடியாது. எனவே, இந்த ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் ஆணை வழங்க வேண்டும் என்று கோருகின்றேன்.

உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் என்றால் எனக்கு வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் இழைப்பதாக இருந்தால் சஜித் – பீரிஸுக்கு வாக்களியுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய அனைவரையும் மீள இணையமாறு அழைக்கின்றேன். நாட்டைக் காப்பாற்ற பாடுபடுவோம். கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு வாக்களித்தவர்கள் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியினால் மனம் நொந்திருப்பர். ஆனால் திசைகாட்டிக்கு வாக்களிப்பது அதற்கு தீர்வாக அமையாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய போதும் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது. எனவே, நாட்டின் வெற்றிக்கான உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். இப்பகுதிகளில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், சர்வதேச இரத்தினக்கல் வலயமொன்றை உருவாக்கவும், இரத்தினக்கல் தொழிலை மேம்படுத்தவும் திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களைப் பாதுகாத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும். ஏனைய வேட்பாளர்களிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு அனைத்தையும் இலவசமாக தருகிறோம் என்று கூறி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். அதை ஒருபோதும் செய்ய முடியாது.

இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்றத்தால் எனக்கு இரண்டு வருட ஆணை வழங்கப்பட்டது. இதனை நிறைவேற்றியுள்ளேன். நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஆணையை நான் இப்போது மக்களிடம் கேட்கிறேன்.

ஏற்றுமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல், பசுமை மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கி புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் புரட்சியை மேற்கொள்ள இருக்கிறேன். மேலும், அஸ்வெசும, உறுமய திட்டங்களைச் செயல்படுத்தி, பெண்களுக்கு அதிகாரம் அளித்து, சமூக நீதி ஆணைக்குழுவை நிறுவி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம்.

செப்டம்பர் 21 ஆம் திகதி பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஆணையை எனக்கு வழங்குமாறு நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.