நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது அரசியல் வருககைக்கு பிறகு இரண்டு படங்கள் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 69 படத்துடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். சினிமாவை விட்டு விஜய் விலகப்போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அரசியல் களத்தில் விஜயின் செயல்பாடுகளை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
மேலும், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், விஜய்யை திரையில் பார்த்து கொண்டாடப்போகும் அந்த கடைசி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.
இப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து இப்படத்தினை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.
மேலும் அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கண்கலங்க செய்தது.
அந்த வீடியோவில் விஜய்யின் பழைய படங்களிலுள்ள அவரது அறிமுக சீன்கள் எடிட் செய்து இடம் பெற்றிருந்தது.
மேலும் விஜய்யின் ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விஜய் படங்களில் வேலை செய்பவர்கள் என அனைவரும் உருக்கமாக பேசியிருந்தார்கள். அதோடு இன்று படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொன்ன நிலையில் தற்போது அதன் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அ.வினோத் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், “ஜனநாயகத்தின் ஒளி ஏற்றுபவர்” என்ற வாசகத்துடன் கையில் தீப ஒளி ஏற்றும் புகைப்படம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
இப்படம் அரசியல் கதைகளத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.