பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை களுத்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.
”1350 ரூபா சம்பள உயர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுத்துள்ளது. விரைவில் 350 ரூபா கொடுப்பனவையும் பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ள உள்ளது. அதனை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்கள் எஞ்சியுள்ள 350 ரூபாவை பெற்றுக்கொடுக்க முற்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இ.தொ.கா தயாராக உள்ளது எனவும், அதனை விமர்சிப்பவர்கள் பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காக்கும் பட்சத்தில் அதனை இ.தொ.கா பெற்றுக் கொடுக்கும் என்றும் செந்தில் தொண்டமான் இந்த பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினார்.