மீண்டும் இணையும் திரிஷா விஜய் சேதுபதி.. இயக்குநர் கொடுத்த அப்டேட்!
2018 ஆம் ஆண்டு வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சூப்பர் ஹிட் அடித்தது, இதையடுத்து தற்போது படத்தின் இயக்குனர் 96 படத்தின் 2ஆம் பாகம் குறித்த தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்..
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ‘96’. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
சேராமல் போன முதல் காதலின் நினைவு என்றென்றும் அழியாத ஒன்று என்பதை தனது தனித்துவமான திரைக்கதையில் சொல்லியதன் மூலம் தனக்கான இடத்தை மக்கள் மத்தியில் பிடித்தார் இயக்குநர் பிரேம் குமார்.
ராம், ஜானு கதாபாத்திரத்தில் திரிஷா, விஜய் சேதுபதி இருவரும் வாழ்ந்திருப்பார்கள். படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படம், மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் படமாக உள்ளது என்றால் மறுக்க முடியாது.
‘96’ பட பிரேம் குமார் இயக்கத்தில் தற்போது ‘மெய்யழகன்’ படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீவித்யா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது இயக்குநர் பிரேம் குமார் இறங்கியுள்ளார். அப்போது நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர் ‘96’ படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அவர் கூறும் போது, தற்போது 5 ஸ்க்ரிப்டுகள் கைவசம் உள்ளதாகவும், அதில் ஒன்று ‘96’ படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறினார். இந்த படத்தின் திரைக்கதை ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், ‘96’ பாகம் 2 படத்தின் கதையை தான் எழுதக்கூடாது என்று நினைத்தாகவும், ஆனால் எழுதி முடித்தபின் கதையை படித்தபோது தனக்கு பிடித்துவிட்டதாக கூறினார். இந்த கதையை விஜய் சேதுபதியின் மனைவியுடன் டிஸ்கஸ் செய்தபோது அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும், முழு ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்தவுடன் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லவுள்ளதாகவும் கூறினார்.
இதனால் மீண்டும் ‘96’ 2 ஆம் பாகத்தை இயக்கும் எண்ணம் தோன்றியுள்ளது. முதல் பாகத்தை போலவே 2 ஆம் பாகத்திலும் விஜய் சேதுபதி, திரிஷா மீண்டும் சேர்ந்து நடிப்பார்கள் என்று கூறினார்.