சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையும் ஜனாதிபதி செயலணியும் நிறுவப்படும்.

எமது நாட்டில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான 14,000 கும் அதிகமான அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான தேசியக் கொள்கை திட்டம் ஒன்றை தயாரித்து, ஜனாதிபதி செயலணி ஒன்றையும் நிறுவி, ஒரு இலக்கோடு இந்த சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்போம் என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளினது உரிமைகளை பாதுகாக்கும் முகமாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ளும் வகையில், இந்நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அமைப்புக்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இதில், நாடளாவிய ரீதியியாக அமைந்து காணப்படும் 14,000 சிரேஷ்ட பிரஜைகளினது சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டுக்கு உயிரோட்டத்தையும் சக்தியையும் வழங்குகின்ற சிரேஷ்ட பிரஜைகள் நாட்டுக்காக பாரிய சேவையை ஆற்றியவர்கள். இந்த நாட்டுக்கான பிரஜைகளை உருவாக்கி நாட்டை வளப்படுத்துவதற்கு கடமையாற்றியவர்கள். இந்தச் சமூகம் குறித்து தற்பொழுது காணப்படுகின்ற அளவை விடவும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். சிலருக்கு இவர்கள் சுமையாக இருந்தாலும் இவர்கள் பெருமதியான வளங்களாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை வளப்படுத்துவதற்காக நாட்டின் பிரஜைகளாக பாரிய சேவையை ஆற்றி இருக்கின்றார்கள். எமது சமூகத்துக்குள் குறைந்து வருகின்ற ஆனால் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பண்பு இருக்கின்றது. அதுதான் நன்றி கடன் செலுத்துவதாகும். சிரேஷ்ட பிரஜைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பொன்று இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகளை கவனித்துக் கொள்கின்ற பண்பை நாம் சமூக மயப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் சேமிப்பு க்காக 15 வீத வட்டி.

சிரேஷ்ட பிரஜைகளின் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக 15 வீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால் அதனை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்திருக்கிறது. இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அதனை நாம் மீண்டும் பெற்றுக் கொடுப்போம். தமது வாழ்வின் இறுதி காலகட்டத்தில் வாழ்கின்ற இவர்களுக்கு தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றி சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைத்து சிரேஷ்ட பிரஜைகளுக்கான அமைப்புகளுக்கும் வருடாந்த நிதி ஒதுக்கிட்டை மேற்கொண்டு அவர்களுடைய செயற்பாட்டிற்கான வசதிகளைச் செய்து கொடுப்போம். அரச தலையீட்டோடு இந்த அமைப்புகள் வலுப்படுத்தப்படும். சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டையின் ஊடாக சுகாதார நிவாரணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றை மேலும் அதிகரிப்போம். இந்த சரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் இடைக்கால சட்டமொன்றின் ஊடாக அவற்றை உறுதி செய்து பெற்றுக் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.