உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மக்களுடைய வாழ்க்கையை சுருக்கி, பொருளாதாரத்தை சுருக்கி, தொழிலாளர் வர்க்கத்தின் மேல் சுமையை அதிகரித்து மீட்சி பெற முடியும் என்று கூறினாலும், அது பிழையான கருத்து. பொருளாதார விருத்தியின் ஊடாகவே மீட்சி பெற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
IMF க்கு 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீளச் செலுத்த வேண்டும். ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த தீர்மானித்து இருக்கிறது. பொருளாதாரம் சுருக்கப்படுகின்ற போது மக்களின் வாழ்க்கை தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு ஏற்றுமதி விருத்தி காண்பதில்லை. அந்த சந்தர்ப்பத்தில் டொலர் வருமானம் கிடைப்பதில்லை. கடனை மீள செலுத்துகின்ற காலத்தை குறைத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாட்டை பாரிய சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பு நுகேகொடையில் நேற்று (11) நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களும் தொழிற்சாலைகளும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்கின்ற வேலைத்திட்டங்கள் இல்லாத நிலையில், 2028 ஆம் ஆண்டு முதல் கடனை மீள செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக 220 இலட்சம் மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, உற்பத்தியும் ஏற்றுமதியையும் அதிகரித்து, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, அனைவரையும் ஒன்றிணைத்த பொருளாதார அபிவிருத்தி ஒன்றையும் சுபீட்சத்தையும் உருவாக்கி வறுமையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஏழைகளின் தொகை ஜனாதிபதிக்கு தெரியாது.
நாட்டின் வறுமை நிலை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது என்பது ஜனாதிபதிக்கு தெரியாது. வறுமையை போக்குகின்ற வேலைத்திட்டங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் நகர, கிராமிய, தோட்டப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன. அது ஜனசவியவுக்கு சமனான நிலையில் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எமது அரசாங்கத்தின் ஊடாக பராட்டே சட்டமூலத்தை மேலும் சில காலத்திற்கு இடைநிறுத்துவோம்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலத்தில் விடப்படுவதை நிறுத்தியது ஐக்கிய மக்கள் சக்தியே. பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதோடு இந்த நிறுவனங்கள் மீண்டும் துளிர் விடுவதற்கு மூலதனத்தை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும். ஆனால் அவை இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக டிசம்பர் 15 ஆம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பராட்டே சட்டமூலத்தை இடை நிறுத்துவோம். அதன் போது வர்த்தகங்களுக்கான மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவர்கள் ஒரு மில்லியனை உருவாக்குவோம். அதற்கு மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம். திறமையும் ஆளுமையுமுள்ள பணியாளர் படையணியொன்றும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
பகுப்பாய்வுகளையும், தரவுகளையும் மையப்படுத்திய அரசாட்சிக்கு செல்ல வேண்டும். மக்களை மையப்படுத்திய ஆட்சிக்குச் செல்ல வேண்டும். அனைத்து கொடுக்கல் வாங்கலும் முறையாக இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.