முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தனிப்பட்ட சரீரப் பிணைகளில் ஒன்றை நெருங்கிய உறவினரால் வழங்கப்பட வேண்டுமெனவும், 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்படும் போது அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
மேலும் மார்ச் மாதம் 14ஆம் திகதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் நால்வருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டதுடன், அவர்களை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.