Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி தெரிவிப்பு
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று (08) இரவு நடைபெற்ற Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்பாராதவிதமாக அந்த இடத்திற்குச் சென்ற ஜனாதிபதியை இளைஞர்கள் அன்புடன் வரவேற்றனர்.
இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கினார்.
நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் ஜனாதிபதி கேட்டதற்கு அந்த இளைஞன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார்.
நாட்டின் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல அரசாங்கம் அவசியம் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்கு நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும் வலியுறுத்தினார்.
மீண்டும் வரிசையில் நிற்க முடியாது என இளைஞன் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, தனது ஆட்சியில் இந்த நாட்டின் இளைஞர்கள் சினிமா வரிசையில் மாத்திரமே நிற்க வேண்டி ஏற்படும் என்றார்.
இதன்போது, Netflix தேவை என்று ஒரு இளைஞன் கூறிய கருத்துக்கு ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார்.
” நெட்ஃபிலிக்ஸ் பெற்றுத் தருவேன். ஆனால் netflix இல் இலங்கை திரைப்படத்தை ஏன் யாராலும் போட முடியாதா? யாருக்கும் முடியாதா? squid game போன்ற ஒன்றைப் போட முடியாதா? அல்லது House of Cards. அல்லது இன்னுமொன்று இருக்கின்றது. designated survivor. கடைசியாக முன்வந்தது யார்? எதிர்கட்சிகளைப் பார்க்கும்போது, நான் பார்ப்பது Chariots of Fire போடத் தான்.
இளைஞன் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சராக தாம் வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த போது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, என்னை அழைத்து வெள்ளை அறிக்கை நல்லது தான், ஆனால் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கச் சென்று அரசாங்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.
மேலும், அந்த மறுசீரமைப்புகளை செய்து தொழிலை இழக்க வேண்டாம் என்று ஜே.ஆர் ஜயவர்தன ஜனாதிபதி தமக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய தான் இதுவரை செயற்பட்டதாகவும், ஆனால் இம்முறை நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றுக்கு முரணாக நடக்க நேரிட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் நாட்டைப் பொறுப்பேற்ற போது பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடன் சுமையுடன் தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
அதன் பிரகாரம், உள்நாட்டு வங்கிகள் ஊடாக கடன் பெற வேண்டாம் என்றும் பணத்தை அச்சிட வேண்டாம் எனவும் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதாகவும், அந்த நிலையை கருத்திற்கொண்டு அரச வருமானத்தை ஈட்டுவதற்கு VAT வரியை அதிகரிக்க வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வர முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த இடத்திற்கு எதிர்பாராத விதமாக வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இளைஞர்கள், தமது தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாட முடிந்தமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.