‘கலைமதி’ விருதுக்கு உரித்தானார்  திரு.நாகேஷ் உருத்திர மூர்த்தி

அண்மையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் திரு. ஏ.நாகேஸ் உருத்திரமூர்த்தி அவர்களை இலக்கிய துறையில் ஆற்றிவரும் சேவையினைப் பாராட்டி ‘கலைமதி’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நாகேஷ் நாகரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடலில் 1951ம் ஆண்டு ஆனி மாதம் 23ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியினை திருக்கதீஸ்வரம் ஆரம்ப பாடசாலையிலும் , அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

பின்னர் தனது பட்டப்படிப்பினை 1976ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். அடம்பன் கிராமத்தில் முதலாவது பட்டதாரியும் இவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர் சுவிஸ் மாசல் பல்கலைக்கழகம் , லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தனது மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளார்.

1986ல் உலகின் முதலாவது வெளியீடாக தமிழ் , ஜெர்மன் , இத்தாலி , பிரான்ஸ் ஆகிய நான்கு மொழிகள் கொண்ட  ஒரு புத்தகமாக சாரதி பயிற்சி புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் 1990ல் உலகின் முதலாவது வெளியீடாக தமிழ் , ஜெர்மன் ஆகிய இரண்டு மொழிகள் கொண்ட ஒரு புத்தகமாக  திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

1992ல் உலகில் முதலாவது வெளியீடாக தமிழ் , ஜெர்மன் ஆகிய இரண்டு மொழிகளை கொண்டு ஒரு புத்தகமாக நாலடியாரை வெளியிட்டுள்ளார்.

2013ல் தனது அனுபவ ஆக்கங்களை திரட்டி ‘நுனிப்புல் மேய்தல்’ எனும் நூலினை வெளியிட்டுள்ளார். பல மேடை நாடகங்களிலும் , ஒரு ஜெர்மன் மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பல்வேறு பிரபல்யமான தமிழ்நாட்டுக் கலைஞர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து நிகழ்வுகளை நடாத்தியுள்ளார். ‘தமிழ் நாதம்’ என்ற பெயரில் தமிழ் வானொலி ஒன்றினை நடத்தினார்.

உலகின் முதலாவதாக செய்மதி மூலமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சியை நண்பர்களுடன் இணைந்து நடத்தியுள்ளார். உலகில் முதன்முதலாக தமிழ் சிங்களம் உட்பட 10 மொழிகள் கொண்ட கைபேசி அகராதியினை வெளியிட்டுள்ளார்.

பட்டிமன்றங்கள் விவாத மேடைகள் பலவற்றிலும் பங்குபற்றியுள்ளார். மொழி பெயர்ப்பாளராக 30 வருடங்களும் , கணனி விஞ்ஞானியாக 25 வருடங்களும் , ஆசிரிய விரிவுரையாளராக 45 வருடங்களும் கடமையாற்றியுள்ளார்.

இவரது கலைச் சேவையினை பாராட்டி மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் ‘கலைமதி’ விருது வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

தற்பொழுது இவர் மன்னார் அடம்பன் பகுதியில் இரசாயணமற்ற சேதனப் பசளைகளைக் கொண்டு விவசாயம் . மரக்கறி வகைகளை உற்பத்தி செய்து வருவதுடன் பெரியதொரு நிலப்பரப்பில் காலநடைகளை வளப்பில் பால் உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)
: