இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை மன்னாரில் ஸ்தாபிக்க முன்னெடுப்பு

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளையை மன்னாரில் ஸ்தாபிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுதாபனத்தின் கிளையை மன்னாரில் ஆரம்பிப்பதற்கான காணி வெள்ளிக்கிழமை (6) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் இக் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் நகர பகுதியில் பொதுமக்கள் மிக குறைந்த விலையில் மருந்துகளை பெற்று கொள்ளும் வகையில் மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த கிளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த காணியை அளவிட்டு அடையாளப்படுத்தும் முகமாக ‘ஒசுசல’ அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் , மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் அசாத் எம்.ஹனிபா , மன்னார் நகர சபை செயலாளர் எக்ஸ்.எல்.பிரிட்டோ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு காணி அடையாளப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)