எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் என எதிர்பார்ப்பதாக மாவை சேனாதிராஜா நம்பிக்கை தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (07) நடைபெற்ற இரண்டு “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணிகளில் கலந்து கொண்ட பின்னர் காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தனது இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா அன்புடன் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.