- சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது எப்படி? அநுர நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்
- ஜனாதிபதி
நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழிற் துறையினர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், இலங்கை செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்துச் செய்வதகாக அவரின் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாமல் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்?
வாக்காளர்களாகிய நாம் இது தொடர்பில் அவதானம் செலுத்தி எமது தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும், நாடென்ற ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயாராக இருந்தால் ஏனைய முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“புத்திசாதுர்யமான தலைமைத்துவத்துடன் வங்கியாளர்கள்” என்ற தொனிப்பொருளில் தேசிய வங்கியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர்கள் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பான மாநாடு, களதாரி ஹோட்டலில் நேற்று(06) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்த பொருளாதார முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க விசேட உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பெருந்தொகையான வங்கியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
“ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி ஏற்பட்டபோது உங்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் நான் உங்களுடன் தொடர்புபட்டுள்ளதோடு கடந்த காலத்தில் நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
2022 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. நமது கடன் சுமை பொருளாதாரத்திற்கு தாங்க முடியாததாகிவிட்டது. அங்கிருந்து இந்தப் பயணத்தை ஆரம்பிக்க நேரிட்டது. எமது பயணம் தொடர்பில் நம்பிக்கை வைத்த பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொருமளவான குழுவின் ஆதரவுடன், சவாலை முறியடித்து முன்னேறினோம். வேறு யாரிடமும் மாற்று ஆலோசனைகள் இல்லை. மாற்று ஆலோசனைகளை வழங்க யாரும் இருக்கவும் இல்லை.
நாங்கள் கடன் மறுசீரமைப்பிற்கான செயற்பாடுகளை ஆரம்பித்தோம். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீனா உட்பட 18 கடன் வழங்கும் நாடுகளுடனான கலந்துரையாடல்களின் ஊடாக கடன் மறுசீரமைப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல்களில் நாங்கள் உடன்பாடு கண்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பொருளாதார பரிமாற்றச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
“இயலும் ஶ்ரீலங்கா” என்ற எண்ணக்கரு பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பொருளாதாரத்தை மையமாக வைத்து புதிய திட்டங்களை செயல்படுத்த அதன்ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்திற்கான பிரதான அடிப்படை என்ன? சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட கடன் நிலைபேற்றுத்தன்மை ஒப்பந்தத்தின்படி நாம் செயல்பட வேண்டும். அதை மீறி செயல்பட முடியாது.
குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு விதமாகவும் நடுத்தர வருமான நாடுகளுக்கு வேறுவிதமாகவும் இந்த கடன் நிலைபேற்றுத்தன்மை ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. அதனை சர்வதேச நாணய நிதியத்தின் இணையதளத்தில் காணலாம். அதன்படி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டும். எனவே இதன்படி செயற்படுவதா இல்லையா என்பதையே தற்பொழுது தீர்மானிக்க வேண்டியுள்ளது.
“இயலும் ஶ்ரீலங்கா” என்ற எண்ணக்கருவின் படி, ஐந்து இலக்குகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் நமது செலவுகள் அதிகரித்தன. கொள்வனவு செய்யும் சக்தி குறைந்தது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது இந்த நிலை ஏற்படும். ஆனால் வரிகளை குறைப்பதாக இன்று சிலர் கூறுகின்றனர். வரிகளை குறைப்பதன் மூலம், கடந்த அரசாங்கம் நாட்டை எந்த இடத்திற்கு கொண்டு சென்றதோ அந்த நிலைக்கு நாங்கள் திரும்பிச் செல்ல நேரிடும். எனவே இது மாற்றுவழியல்ல. ரூபாவை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம். ரூபாவை வலுப்படுத்த அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
நான் ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திற்குப் பிறகு, அரசின் நிவாரணப் பணிகளைத் தொடங்கினோம். அதற்காக அஸ்வெசும திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை உயர்த்தவும் பணியாற்றினோம். உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பிரகாரம் அடுத்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்துவோம்.. வரி மட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
ரூபாவை பலப்படுத்தினால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். யார் என்ன சொன்னாலும் இதற்கு மாற்று வழியில்லை. அந்த உண்மையை அறிந்து செயல்பட வேண்டும்.
எனவே, இந்த திட்டங்களை நாம் தொடர வேண்டும். செப்டம்பர் 22 முதல் அவற்றை அமுல்படுத்தலாம். வேறு எந்த கட்சிக்கும் இதுபோன்ற திட்டம் கிடையாது.
“இயலும் ஸ்ரீலங்கா” என்பது செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு வேலைத் திட்டமாகும். “ரணிலுக்கு வெற்றி, நாடு ரணிலுக்கு” என்று நான் கூற மாட்டேன். பழைய அரசியல் சம்பிரதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறுபவர்கள் இன்று சம்பிரதாய அரசியலில் ஈடுபடுகிறார்கள். சம்பிரதாய அரசியல் மூலம் வருபவர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் செய்யும் அந்த மாற்றத்தை பொருளாதாரத்திற்கு மட்டுப்படுத்த முடியாது.
சமூக வன்முறைகளைத் தடுத்தல், பெண்களை வலுவூட்டல் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கல்விக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட வேண்டும். நாட்டிற்கு அரசியல் பரிமாற்றம் தேவை. ஒன்பது மாகாண சபைகளும் நிர்வாகப் பிரிவாக இல்லாமல் அபிவிருத்திப் பிரிவாக செயற்பட வேண்டும். அவற்றில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.
“இயலும் ஸ்ரீலங்கா” என்பது செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு வேலைத்திட்டமாகும். “ரணிலுக்கு வெற்றி, நாடு ரணிலுக்கு” என்று நான் கூற மாட்டேன். பழைய அரசியல் சம்பிரதாயத்தில் மாற்றம் வரவேண்டும் என்று கூறுபவர்கள் இன்று சம்பிரதாய அரசியலில் ஈடுபடுகிறார்கள். சம்பிரதாய அரசியல் மூலம் வருபவர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் செய்யும் அந்த மாற்றத்தை பொருளாதாரத்திற்கு மட்டுப்படுத்த முடியாது.
சமூக வன்முறைகளைத் தடுத்தல், பெண்களை வலுவூட்டல் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கல்விக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட வேண்டும். நாட்டிற்கு அரசியல் பரிமாற்றம் தேவை. ஒன்பது மாகாண சபைகளும் நிர்வாகப் பிரிவாக இல்லாமல் அபிவிருத்திப் பிரிவாக செயற்பட வேண்டும். அவற்றில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.
மேலும், அரசியலில் ஈடுபடாதவர்களுக்கு மக்கள் சபை முறையை நாம் ஏற்படுத்த வேண்டும். மேலும், ஒரு இலட்சம் பிரஜைகள் ஒன்றிணைந்து சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு பிரேரணையும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் பின்னர் இந்த நாட்டின் அரசியல் முறைமை மாறியுள்ளது. புதிய அரசியல் முறைமை உருவாகி வருகிறது. அதற்கு சில காலம் பிடிக்கும். ஆனால் அதற்குத் தேவையான பின்னணியை நாம் தயார் செய்து வருகிறோம். திருடன் -பொலிஸ் விளையாட்டைப் போல திருடர்களை பிடிக்க முடியாது. அதற்கு தேவையான சட்டங்களை இயற்றியுள்ளோம். வேறு சில சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அதற்கு தேவையான பயிற்சிகளை தேவையான நபர்களுக்கு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாம் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்கிறோம்.
தேர்தல் முறைமை தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஆணைக்குழுவை நியமித்தோம். அந்த அறிக்கையில் எண்பத்தேழு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை. இவற்றை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தற்பொழுது நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
இதற்கு மேலதிகமாக இரண்டு மாற்று முன்மொழிவுகள் உள்ளன. ஒன்று “புளூ பிரிண்ட் 3”. இது உண்மையில் பொருளாதாரத்தைக் குறிக்கும் ஒரு பரிந்துரையாகும். அது சாதாரண மக்களுக்குப் புரிகிறதா இல்லையா என்ற பிரச்சினை உள்ளது. ஆனால் ஒரு கட்சியால் இரண்டு கொள்கைப் பிரகடனங்கள் முன்வைக்கப்பட்டிருப்பது தான் பிரச்சினை. ஒரே கட்சியின் இரண்டு குழுக்கள் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்துள்ளன.
அடுத்த மாற்று முன்மொழிவு திசைகாட்டியில் உள்ளது. அதில் வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 1948 முதல் இன்று வரை நாட்டை ஆட்சி செய்தவர்கள் எதனையும் செய்யவில்லை. மற்றவர்கள் நாட்டை சுரண்டியாதாகவும் தாங்கள் தான் நாட்டிற்கான பணிகளைச் செய்தோம் என்றும் கூறுகின்றனர். நாட்டிற்காக அவர்களிடம் எந்த ஆலோசனையும் இல்லை. அவர்களின் அறிக்கையின் இருநூற்று முப்பது பக்கங்களையும் நான் படித்தேன்.
எமது நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என செப்டம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொள்கையளவில் இது மிகவும் நல்லது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை உள்ளது. இலங்கை செய்து கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இரத்துச் செய்யப்படும் என அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாமல் ஏற்றுமதித் தொழிலை எவ்வாறு உருவாக்க முடியும்? அதனால் இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
மேலும் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அவர்களின் பொருளாதார நிபுணர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் பொருளாதார பரிமாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றனர். இந்த வரைவு, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்றும், அதனால் இறக்குமதி சார்ந்த வர்த்தகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறியே அவர்கள் நீதிமன்றம் சென்றனர். இவை போன்ற காரணங்களால் இந்த வரைவு அரசியலமைக்கு எதிரானது என்று வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டாவது காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு சமமாக நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதாகும். ஒரு பக்கம் அவசியம் என்கிறார்கள், மறுபக்கம் தேவையில்லை என்கிறார்கள். இதுபோன்ற வேலைத்திட்டத்தை தொடர முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுதான் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றமா?
இதனைத் தெளிவுபடுத்துமாறு அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோருகிறேன். இவ்வாறு அரசியல் செய்ய முடியாது. நாடு காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் கவனமாகச் சிந்தித்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த நாட்டில் அரசியல் என்பது வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு ஓடுவதாக மாறிவிட்டது. ஏனைய நாடுகளைப் போன்று, வேலைத்திட்டத்தை முன்வைத்து, அதைப் பாதுகாத்து முன்னேறுவதில்லை. நாம் முதலில் அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
திசைகாட்டி போன்று வெறுப்பைப் பரப்பி, அடிப்படை இன்றி கதை பேசி 232 பக்கப் புத்தகத்தை வெளியிடுவது தீர்வுக்கு வழிவகுக்காது. எனவே நாம் இங்கிருந்து நாம் முன்னேற வேண்டும். நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாவிட்டால், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க அவர்களுக்கு உரிமை இல்லை. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி கதைப்பவர்களால் மாத்திரமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும். வாக்காளர்களாக இந்த விடயங்களை உன்னிப்பாகக் கவனித்து முடிவெடுக்க வேண்டும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, தேசிய வங்கியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அசேல பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் குழு, உயர்மட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கியாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.