- நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று ஏனைய தலைவர்கள் தப்பியோடிய போது நான் கஷ்டப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன்.
- வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்
- நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழி ‘இயலும் ஶ்ரீலங்கா’ வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
- தேசிய மக்கள் சக்தி மக்களிடம் பொய் சொல்லாமல் தங்களின் உண்மையான பொருளாதார கொள்கையை நாட்டுக்கு சொல்ல வேண்டும்.
ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான் புதிய பயணமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதா, அல்லது நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என ஏனைய தலைவர்கள் தப்பி ஓடிய வேளையில் தாம் சிரமப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மேலும் நிவாரணங்களை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஹினிதும பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி தான் கருத்துத் தெரிவித்த போது, அதற்கு எதிராக இருந்த அனுரகுமார திஸாநாயக்க இன்று ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறுவதாக கூறி அரசாங்கத்தின் செயற்பாட்டை திருப்பிச் சொல்கிறார்.
எனவே மக்களுக்கு பொய் சொல்லாமல் தேசிய மக்கள் சக்தி தமது பொருளாதார கொள்கை என்ன என்பதை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
” இன்று நாட்டுக்கு பொருளாதார மீட்சி தேவைப்படுகிறது. எவ்வளவு கசப்பாக இருந்தாலும் மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டும் என்பதே எமது கொள்கை. அதனாலேயே 2020 தேர்தல் காலத்தில் முன்கூட்டியே உண்மையை சொன்னேன்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை இணைத்தோம். அதனை எவரும் ஏற்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஏற்காததால் அனைவரும் வீடுகளுக்குச் சென்றோம். நான் மட்டும் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வந்தேன். எவ்வாறாயினும் நான் எதிர்வுகூறியது உண்மையானது.
அன்று நான் தனியாகவே ஜனாதிபதியாகினேன். அப்போது எந்தவொரு வௌிநாடும் இலங்கைக்குக் கடன் தர தயாராக இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் வௌிநாட்டுக் கடன்களை கட்டுப்படுத்த சொன்னது. எமது வருமானத்தில் முன்னோக்கி பயணிக்குமாறு ஐஎம்எப் கூறியது. ஆனால் இன்று எமக்கு கடன் வழங்கும் நாடுகளின் உதவி கிடைத்துள்ளது. விருப்பமே இல்லாமல் வற் வரியை அதிகரிக்க வேண்டிய நிலை வந்தது.
அதனால் கடன் வாங்காமல் வருமானத்தை அதிகரிக்க வழி கிடைத்தது. ரூபாய் வலுவடைந்து நாட்டுக்கு நல்லதொரு முன்னேற்ற பாதை கிடைத்து. எமது தீர்மானங்கள் சில நேரம் மக்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால், அதன் பலனாகவே இன்று அஸ்வெசும – உறுமய போன்ற திட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்திருக்கிறோம். அடுத்த வருடத்திலும் அதிகரிக்கப்படும். ஓய்வூதிய தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று நாடு முன்னோக்கிச் செல்வதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. எமது பாதையில் சென்று வலுவான நாட்டை கட்டியெழுப்புவதா அல்லது மீண்டும் கஷ்டத்தில் விழுவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
அதனை தீர்மானிக்கவே இயலும் ஸ்ரீ லங்கா என்ற திட்டம் ஐந்து பிரதான காரணிகளை உள்ளடக்கி முன்மொழியப்பட்டுள்ளது. இன்று எதிர்கட்சிகள் வரி குறைப்பு பற்றி பேசுகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவும் இவ்வாறுதான் பிரச்சினைகளை தேடிக்கொண்டார்.
எனவே இந்த முறையை மாற்ற முடியாது. படிப்படியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். அதேபோல் நாட்டில் விவசாயத்தை நவீனமயப்படுத்துவோம். அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் நிவாரணம் வழங்கும் திட்டங்களை அரசாங்கம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கும்.
மேலும் நாட்டில் அதிகபட்சமாக உள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளோம். தங்கக் கடன்களுக்கு வரிச் சலுகை வழங்கவும் தீர்மானித்திருக்கிறோம். வீட்டு வன்முறைகளை மட்டுப்படுத்த சட்ட உதவிகளையும் வழங்கவுள்ளோம்.
அதேபோல் இளையோருக்கான தொழில்வாய்ப்புக்கான திட்டங்களையும் முன்மொழிந்திருக்கிறோம். சுற்றுலாத்துறையினையும் பலப்படுத்துவோம். இப்போதும் காலியில் புதிய சுற்றுலா ஹோட்டல்களை அமைப்பதற்கான இடங்களை தெரிவு செய்திருக்கிறோம்.
தாய்லாந்து, விடய்நாம் போன்று ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதனை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் இப்போது அனுர குமார திசாநாயக்க எமது கொள்கைகளை பின்பற்ற முன்வந்துள்ளார். ஆனால் வௌிநாட்டு முதலீடுகள் தொடர்பில் அவர்களுக்கு தௌிவான கொள்கையில்லை.
எனவே மக்களுக்கு பொய் சொல்லக்கூடாது. உண்மைகளை சொல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரம் வேண்டும் என்கிறார்கள். அதனை நாம் செய்தால் எமக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்கள்.
நாம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் இந்த நாட்டு மக்களின் கேள்விக்குறியான எதிர்காலத்தை ஔிமயமாகதான மாற்றியுள்ளோம். இதே பாதையில் படிப்படியாக முன்னோக்கிச் சொல்வோம். அதற்காக சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிப்போம். வாக்களிக்கத் தவறினால் சிலிண்டரும் இருக்காது. சுற்றாலாப் பயணிகளும் இருக்கப் போவதில்லை.” என்றார்.
அமைச்சர் ரமேஷ் பத்திரன;
“2022 ஆம் ஆண்டில் வௌிநாடுகளுக்குச் சென்றிருந்தவர்களும் நாட்டுக்குள் வந்து முடங்கிக் கிடந்தனர். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவியது. அப்போதுதான் இந்த நாட்டை ஏற்கும் வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்தது. அதற்கு முன்பாகவே ஐக்கிய மக்கள் சக்தியினர் திறைசேரிக்கு சென்று கலந்துரையாடினர்.
ஆனால் கலந்துரையாடிய பின்னர் இந்த நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது. நாட்டை மீட்க பெரும் சக்தியொன்று அவசியம் என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு அவர்கள் மறைந்து கொண்டனர். நாடு வன்முறைக்குள் சிக்கித் தவித்தது. அந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சூட்சுமான முறையில் மீட்டெடுத்தார்.
இன்று நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை கோரிச் செல்வோரிடம்,உங்கள் நாடுகளில் ஒரு ரணில் விக்ரமசிங்கவை தேடிக்கொள்ளுங்கள் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. எதியோப்பியா போன்ற நாடுகளுக்கும் அதே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மற்றுமொரு ஆட்சிக்காலம் இந்ந நாட்டிற்கு கட்டாய தேவையாக உள்ளது.” என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன:
“கடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மட்டுமே மிஞ்சியது. ஆனால் இன்று எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக அமர்ந்திருக்கிறார். அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் நாட்டின் பாதுகாப்புக்கு வழி செய்யும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான திட்டமும், குழுவும் எம்மோடு இருப்பதால் செப்டம்பர் 22 முதல் அடுத்தகட்ட பணிகளை தொடர்ச்சியான முன்னெடுத்துச் செல்ல எம்மால் முடியும்.” என்றார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார:
“இந்நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழியை ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவே காட்டினார். எனவே செப்டம்பர் 21 ஆம் திகதி தவறான தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்ற எந்த நாடும் முன்னேறியதில்லை என்று கூறிவந்தஅனுரகுமார திசாநாயக்க ,இன்று மக்கள் ஆதரவு படிப்படியாக குறைவும் வேளையில் வியாபாரிகள் முன்னிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பாடுவதாக கூறுகிறார் .
அதனால் அனுரகுமாரவின் போலியான வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் இன்று நாமல் ராஜபக்ஷவும் சஜித் பிரேமதாசவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உதவியுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.”என்றார்.
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்:
இன்று தோட்ட மக்கள் மீது அனுதாபம் காட்டுவோர் தான் அன்று தோட்ட அலுவலகங்களுக்கு தீ மூட்டிவிட்டு அங்கிருந்து மக்களின் சம்பளப் பணத்தை திருடிச் சென்றார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை.
வாக்களிக்கும் முன்பு தேர்தல் நடத்த நாடொன்று எஞ்ச வேண்டும் என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் கஷ்டங்களையும் தீர்த்து வைத்த தலைவர் எமது ஜனாதிபதி என்பதையும் மக்கள் மறந்துவிடக்கூடாது.” என்றார்.