சட்டத்துறையின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட தேசிய கொள்கை சட்டமாக்கப்பட்டுள்ளது

 அந்த தேசியக் கொள்கை மற்றும் தமது கொள்கைப் பிரகடனங்களுடன் பகிரங்க உரையாடலுக்கு வாருங்கள்

 2048 இல் செல்வந்த நாடாக மாறுவதற்கான வழிமுறையை நடைமுறைப்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்

  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

எதிர்கால இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு சட்டத்துறையின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட தேசிய கொள்கை சட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 2048 ஆம் ஆண்டளவில் வறுமையை ஒழித்த செல்வந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கான வழிமுறை அந்த சட்டங்கள் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவது அந்த வழிமுறையை முறையாகச் செயல்படுத்துவதற்கே தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சி நிரலையும் அமுல்படுத்துவதற்காக அல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தேசிய கொள்கையுடன் தமது கொள்கைப் பிரகடனங்கள் குறித்து பகிரங்க உரையாடலுக்கு வருமாறு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், அதற்காக தேசிய தொலைக்காட்சி மற்றும் சுயாதீன தொலைக்காட்சிகளின் அரசியல் நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

2022 இல் இந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்த பிறகு, பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 7.8 வரை பின்னோக்கிச் சென்றதால், நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு வறண்டு போனது. இதன் விளைவாக, இறக்குமதிக்கான இந்நாட்டின் கடன் பத்திரங்கள் சர்வதேச அங்கீகாரத்தை இழந்தன. அதன் காரணமாக, பெட்ரோலியம், எரிவாயு, உணவுகள், இயந்திரங்கள் அல்லது உதிரிப் பாகங்கள் இல்லாத ஒரு பாரிய பொருளாதார பேரழிவு ஏற்பட்டது.

அந்தப் பொருளாதாரப் பேரழிவின் முன்னே ஜனநாயகத்தையும் பாராளுமன்றத்தையும் காப்பாற்றிய பின்னர், நாட்டைக் காப்பாற்ற குறுகிய கால அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் நிதியைப் பெறுவதற்காக ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தின்படி, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருடங்கள் அந்தக் கடன் ஒப்பந்தத்தின்படி செயற்பட வேண்டும். உதாரணமாக, அந்தக் கடன் ஒப்பந்தம் இன்றி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையை தயாரிக்க முடியாது

2025 ஆம் ஆண்டிற்காக இன்னும் நான்கு மாதங்களில் வெளிப்புற வெளிநாட்டு வள இடைவெளியான 05 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடுகட்ட, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கிடைக்கும் 663 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நீடிக்கப்பட்ட கடன் வசதி, வரவு செலவுத்திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆதரவாகக் கிடைக்கும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உலக வங்கி வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் கடன் நிவாரணமாகப் கிடைக்கும் 3655 மில்லியன் டொலர்கள் உள்ளிட்டவை மொத்தத் தொகையாகும் என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டில் யார் ஜனாதிபதினாலும், சரி, யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் சரி, 2027ஆம் ஆண்டு 3911 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிப்புற வளப் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை வழங்க நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சு கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 329 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையைத் தயாரிக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.

உலக வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கும். கடன் நிவாரணமாக 1,482 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதனால், 2027 இல் நாட்டைக் கொண்டு செல்ல 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும். அது மிகப் பாரிய தொகை என்பதைக் கூற வேண்டும்.

இந்நாட்டின் மிகப்பாரிய முதலீடான கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்காக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டன. எமக்கு 2027 இல் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச சந்தைக்கு சென்று பிணைமுறிப் பத்திரத்தை வெளியிட சர்வதேச நாணய நிதியம் அந்த ஒப்பந்தத்தின் மூலம் எமக்கு இடமளித்துள்ளது. அதன்போது எமக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

2027 இல் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், 2025 இல் எமது வெளிநாட்டுச் சொத்துக்களை 08 பில்லியன் டொலர்களாகவும், 2026 இல் 10 பில்லியன் டொலர்களாகவும் நமது அதிகரிக்க வேண்டும். மேலும் 2027 இல் இலங்கையின் வெளிநாட்டு வள சொத்துக்கள் 14 பில்லியன் டொலர்களாக மாறினால் மாத்திரமே சர்வதேசத்திற்குச் சென்று பிணைமுறிப் பத்திரத்தை வெளியிட்டு கடனைப் பெற முடியும். அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், யார் ஆட்சி செய்தாலும் அதற்கு மேல் அந்த அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச தலையீட்டுடன், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை உத்தியோகபூர்வ கடன் குழு (OCC), ஆக கூடி, பிரான்சின் லசாட் நிறுவனம், சட்ட விவகாரங்களுக்காக கிளிஃபோர்ட் சான்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக ஈடுபட்டு, நாடுகளுடன் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து ஒப்பந்தங்களை ஏற்படுத்தினர். அதன் பலனாகவே இந்த மூன்று வருடங்களும் கடன் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

2028 முதல் கடன் செலுத்தத் தொடங்கும் போது இந்நாட்டின் மாற்று விகிதங்கள் சரியாமல் இருக்க, பல பொருளாதார பரிமாற்று நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள பொருளாதார நிபுணர்கள், இந்த நாட்டில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து தயாரித்து, நாட்டை தொடர்ச்சியாக முன்னெடுக்க தேசியக் கொள்கையைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றினோம். இதுவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கை மற்றும் வேலைத்திட்டமாகும்.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் 03 முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. இது குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்டுள்ளது. 2032 ஆம் ஆண்டாகும்போது, செலுத்தப்படாத மொத்தக் கடன் தொகை, மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக 95%இற்கும் குறைவாக இருக்க வேண்டியுள்ளதோடு, அது தொடர்ந்து பேணப்பட வேண்டும். மேலும், அரசாங்கத்தின் மொத்த பண விநியோக விகிதம் மொத்தத் தேசிய உற்பத்தியின் சதவீதமாக 13% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

மேலும், வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி செலுத்துதல் கடன் சேவைகள் மொத்தத் தேசிய உற்பத்தியில் 4.5% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. அதேபோல், 2032 ஆம் ஆண்டாகும்போது, அரசாங்கத்தின் வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 15% அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். கொடுப்பனவின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்தத் தேசிய உற்பத்தியில் 1% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. மேலும், அந்த ஆண்டுக்குள், அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் 2.3% மேலதிகம் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், 2027 முதல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். வேலையின்மை விகிதமும் 5%இற்கு குறைவாகவே இருக்க வேண்டும். மேலும் பெண் தொழிலாளர் பங்களிப்பு 40%இற்கு மேல் இருக்க வேண்டும். இதன் விளைவாக, பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வரும். பொருளாதாரம் வேகமாக வளரும்.

டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, விவசாய நவீன மயமாக்கல் போன்றவையும் இந்தச் சட்டத்தில் அடங்கும். மேலும், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அந்நிய நேரடி முதலீட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் வகையில், புதிய நிறுவனம் உட்பட பல புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. தேசிய பொருளாதார ஆணைக்குழு, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவலகம், தேசிய உற்பத்தித்திறன் பணியகம், பொருளாதார விஞ்ஞானம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அடுத்த ஆண்டு நிறுவப்பட உள்ளன.

அத்துடன், இந்தச் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொருளாதாரத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை வழிநடத்தும் பொறுப்பை அமைச்சரவை ஏற்க வேண்டும். 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இதன் பின்னர் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் இலங்கை மத்திய வங்கி பணம் அச்சிடுவதைத் தடுத்துள்ளது. கொலை மிரட்டல் செய்து பணத்தை அச்சிடுமாறு கூறப்பட்ட போதிலும், இலங்கை மத்திய வங்கி மற்றும் பணிப்பாளர் சபை இதன் பின்னர் பணத்தை அச்சிட முடியாது.’’ என்று தெரிவித்தார்.