மாத்தறை மாவட்டத்தின் தெனியாய,மொரவக்க பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கெடபெறுவ விகாரையில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினால் முன்னெடுக்கப்படும் ‘DP Education’ நிறுவனத்திற்கும் விஜயம் செய்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, நிறுவன நிர்வாக அதிகாரிகளுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
கணினி மற்றும் தகவல் தொழிநுட்ப கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான ஆதரவை நிறுவனத்திற்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாறான கல்வி நிலையங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கெடபெறுவ விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் ,அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கயான் சஞ்சீவ ஆகியோர் கலந்துகொண்டனர்.