ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கைக்கான முன்மொழிவுகள் வெளியீடு..!

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு வைபவம், செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பு அமரசேகர மாவத்தையில் அமைந்துள்ள ரெயின்போ ரிசோர்சஸ் லங்கா மற்றும் ரெயின்போ கல்வி நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த மதிப்பாய்வானது இலங்கை முழுவதும் உள்ள ஊடக சமூகத்தின் 250 பிரதிநிதிகளின் பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் ஊடகவியலாளர்கள், ஊடகக் கல்வியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வினைத்திறன்மிக்க நான்காவது துறையாக செயற்படும் சுயாதீனமான, பன்மைத்துவ மற்றும் சுதந்திரமான ஊடகங்களின் அபிவிருத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் ஒட்டுமொத்த குறிக்கோளாகும்.

‘ஊடகதுறை என்பது சவால்கள் நிறைந்த துறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலகின் பல பகுதிகளில் ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.அவர்கள் எப்போதும் இல்லாத வகையில் மோசமான பகையை சந்தித்து வருகிறார்கள். இலங்கையில் இன்றைய ஊடகவியலாளர்கள் மரணத்தை கையில் ஏந்திக்கொண்டு தமது பணியை மேற்கொள்கின்றார்கள் என்பது போலியான கூற்றல்ல. அத்துடன் ஏனையோரின் பிரச்சினைகளினை பேசும் நாங்கள் எம்மத்தியில் இருக்கும் பிரச்சினைகளினை கண்டுக்கொள்ளாத நிலையில் நாம் பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களினை எதிர்கொண்டுவருகின்றோம்’ என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடகத் தொழிலாளரகளுக்கான தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான திரு. லங்காபேலி தர்மசிறி தெரிவித்தார்.

இந்த தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கைக்கான முன்மொழிவுகளின் பிரதிகள் ஜனாதிபதி வேட்பாளர்கள், அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானியர்களுக்கு கையளிக்கப்படும். இதன் முதற் பிரதி ரெயின்போ ரிசோர்சஸ் லங்கா மற்றும் ரெயின்போ கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி மனிக் மென்டிஸ்க்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணி இஃபாம்