இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதமின்றி இளைஞர்களுக்காக, யாருக்கும் அடிமைப்படாது, அடிபணியாது, சுதந்திரமான சமூக வாழ்க்கைக்குள்ளும், ஜனநாயக வாழ்க்கைக்குள்ளும், நுழைவதற்கும் தன்னம்பிக்கையோடும், சுயமாகவும் எழுந்து நின்று கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம். நாட்டின் கொள்கை திட்ட தயாரிப்பின் போது முன்னோடிகளாக இளைஞர்களை நியமித்து, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் பொறுப்புக்களை ஏற்கக் கூடிய தலைவர்களாக மாறுவதற்கான சூழ்நிலைக்குள் அவர்களை பிரவேசிக்கச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் கொள்கை பிரகடன வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாம் ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குவோம். ஒவ்வொரு இளைஞரிடமும் காணப்படுகின்ற ஆளுமை, திறமை, பண்பு, முயற்சி, என்பனவற்றின் ஊடாக தொழில் முனைவராக சமூகத்திலே செயல்பட முடியும் என்றால் அவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க செலவுக்கு ஏற்ப மூலதனத்தையும் வழங்குவோம். அத்தோடு ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்ற போது அவர்கள் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்திலும் பொருளாதார அபிவிருத்தியிலும் பங்காளர்களாக மாறுவதோடு, தலைவர்களாகவும் மாறுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டு அறிவை மையப்படுத்திய பொருளாதாரம்.
அறிவை மையப்படுத்திய பொருளாதாரத்தை கட்டி எழுப்புகின்ற இந்தப் பயணத்தில், பல விடயங்களை இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்தியாவைப் போன்று பல கல்வி நிலையங்களை எமது நாட்டிலும் உருவாக்குவோம். அதன் ஊடாக கல்வி கற்ற சிந்தனையுள்ள வருமானத்தில் முன்னேற்றமடைந்த நடுத்தர வர்க்கம் ஒன்று உருவெடுக்கும். அந்தப் பயணத்திற்காக எமது நாட்டு இளைஞர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும். இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக ஆங்கிலம் மற்றும் சர்வதேச மொழிகளையும் ஏனைய அறிவையும் கணினி விஞ்ஞானத்தையும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப அறிவையும், பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான தனியான ஜனாதிபதி செயலணி
இதுவரையும் வரப்பிரசாதங்களை பெற்றவர்களுக்கு மாத்திரம் கிடைக்கும் இந்த சலுகைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அறிவை கேந்திரமாகக் கொண்ட இந்த பொருளாதாரத்தில் கல்வி கற்றவர்களை புத்திஜீவிகளாக மாற்றும் புதிய கலாச்சாரம் உருவாக்கப்படும். இந்த இளைஞர் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து கொள்கைகளும், திட்டங்களும் குறிப்பிட்ட தினங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதோடு, அதற்காக விசேட ஜனாதிபதி செயலணியும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
76 வருட கால வரலாற்றை மாற்றியே இன்று இந்த இளைஞர்கள் முன் இருக்கின்றோம்.
இந்த இளைஞர்களை ஏமாற்றி, வஞ்சித்து, அவர்களின் கண்ணை மறைத்து அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக அல்லாது இந்த இளம் தலைமுறையினருக்காகவே இந்த இளைஞர் பிரகடனத்தை முன் வைத்தோம். இந்த 76 வருட ஜனநாயக வரலாற்றில் இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும், ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அமைச்சர்களும், அதிகாரத்தில் இருந்து கொண்டே நாட்டுக்காக சேவை செய்திருக்கிறார்கள். எந்த அதிகாரமும் இல்லாமல் இந்த மண்ணுக்கான நிதர்சனத்தை உண்மைப்படுத்தியுள்ளோம் என்பதை நிரூபிப்பதே இந்த இளைஞர் பிரகடனத்தின் விசேட தன்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு எந்த ஒரு தரப்பினருக்கும் இல்லாத அடித்தளம் ஐக்கிய மக்கள் சக்திக்கு காணப்படுகின்றது. அதிகாரத்தோடு நாட்டுக்கு சேவை செய்தல் என்ற முறையை மாற்றி வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சியாக இருந்து மூச்சு, பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்டக்களின் ஊடாக பில்லியன் பெறுமதியான தொகையை இந்த நாட்டின் பாடசாலை கட்டமைப்புக்கும், சுகாதார கட்டமைப்புக்கும் சேர்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.