எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு.
யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கடந்த காலங்களில் இருந்த எந்த ஒரு தலைவருக்கும் முடியாமல் போயிருக்கின்றது. எனவே தான் ஜனாதிபதியான உடனே வட கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு, யுத்தத்தின் பின்னரான பாரிய அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, வடக்கையும் கிழக்கையும் மையமாகக் கொண்ட பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம். ஏனைய மாகாணங்களுக்கும் அதன் பிரதிபலன் செல்லக்கூடிய வகையில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள் வெற்றிப் பேரணி தொடரின் 32 ஆவது கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (03) மன்னாரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பின் ஊடாக, அந்தந்த மாகாணங்களில் தேசிய உற்பத்திக்காக அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பையும் கணக்கிட்டு இருக்கின்றார்கள். அதில் 43.4% மேல் மாகாணத்தில் கிடைக்கின்றது. வட மாகாணத்தின் பங்களிப்பு 4.1. வீதமாகவும், கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு 5.2 வீதமாகவும் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தரவுகளையும் தகவல்களையும் மையமாகக் கொண்டு முழு நாட்டையும் அபிவிருத்தியின் பால் விட்டு செல்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார.
விவசாயிகளுக்கும், மீனவர்களுக்குமான சலுகைகள் 50 கிலோ கிராம் உடைய உர மூடை ஒன்றை சலுகை விலை அடிப்படையில் 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்வோம் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. QR CODE முறையூடாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகன உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுப்போம். சகல வசதிகளையும் கொண்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும் சகல வசதிகளையும் கொண்ட மீன்பிடித் தொழிலுக்காகவும் சக்தியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். சட்ட விரோதமான முறையில் எமது கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து இராஜதந்திர முறையில் அதற்கான தீர்வினை பெறவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மீண்டும் கம் உதாவ.
கடந்த அரசாங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம். வீட்டுக்கடன்களை வழங்கி வீடமைக்கும் யுகத்தை உருவாக்குவோம். இன, மத, குல, வகுப்பு பேதங்கள் இன்றி காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்கும் கம் உதாவ திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு முதலிடம்.
பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு முதலிடம் வழங்கப்படுவதோடு, இளைஞர்களுக்காகவும் விசேடமான வேலை திட்டங்களை முன்னெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மன்னருக்கான அபிவிருத்தி யுகம்.
மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும். சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி தொழிற்துறை உருவாக்கி பலமிக்க அபிவிருத்தியை கொண்டு வர முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.