ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வு தருவார் ரணில்: அமைச்சர் சுசில்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு:அமைச்சர் சுசில் தெரிவிப்பு

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரை கொழும்புக்கு அழைத்து சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறினாலும் அவர்களது கொள்கை விளக்கத்தில் அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் தமது கொள்கை விளக்கத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழு வொன்றை நியமித்து அந்த குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மட்டுமன்றி அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அதனை நடைமுறைப்படுத்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து விளக்கமளித்த அமைச்சர்;

பிரதான வேட்பாளர்கள் தமது கொள்கை விளக்கத்தை முன் வைத்துள்ளனர். நாம் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 55,000 ஆக அதிகரிப்பது தொடர்பில் தெரிவிக்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் அதனை 57,000 ரூபாவாக வழங்கப் போவதாக  கூறுகின்றனர். எனினும் அவர்கள் அவர்களது தோல்வியைக் காட்டவில்லை. எமது வேலைத் திட்டம் அவர்களது வேலைத் திட்டம் போல் எந்த வழிகாட்டலும் இல்லாத வேலைத் திட்டமல்ல. சம்பள முரண்பாட்டு தீர்வு தொடர்பில் எந்த கொள்கை விளக்கத்திலும் தீர்வு முன்வைக்கப்படவில்லை நாம் புதிதாக அதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் கொள்கை விளக்கம் வெளியிடுவதற்கு முன்னரே நாம் சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டுள்ளோம். அதனால் நாம் கொள்கை விளக்கத்தில் மீண்டும் அதனை உட்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. நெருக்கடியிலிருந்த நாட்டை நாம்  இரண்டு வருடங்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். கல்வியமைச்சர் என்ற வகையில் நான் கல்வித்துறையினரிடம் தெரிவிப்பது அந்த நம்பிக்கையை எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்லுங்கள் என்பதே. ஆசிரியர்களுக்கு மொடியூலர் முறைமையின் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்குவதற்குப் பதிலாக இலகுவான முறைமையை அறிமுகம் செய்யும் வரை 2025 ஜூலை மாதம் வரை மொடியூலர் முறைமையை நிறுத்தி வைப்பதற்கு ஆணைக் குழுவுடன் இணைக்கப்பாடு காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.