- அரசியல் கட்சிகள் நாட்டுக்காக கைகோர்த்துச் செயற்பட முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம்.
- டெலிபோன் அணி வாக்குகளை திருடும் வேளையில், திசைக்காட்டிக்கு கடந்த காலம் மறந்துபோயுள்ளது.
- நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை மறக்க மாட்டேன்.
- ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வாக்குகளை திருடும் நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜேவிபி கடந்த காலத்தை மறந்துவிட்டது என்றும், கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்திற்கு செல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்ல மொனார்ஷ் இம்பீரியல் ஹோட்டலில் இன்று (02) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க:
முதன்முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் மாநாட்டில் உரையாற்ற கிடைத்திருப்பது கௌரவமாகும். ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். அப்போது எனக்கு 10 வயது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவை பல தடவைகள் சந்தித்திருக்கிறேன்.
நாட்டை அபிவிருத்தி செய்ய இரு கட்சிகளும் அர்ப்பணித்துள்ளன. எங்களுக்குள் வேறுபாடுகளும் இருந்தன. அதனால் நன்மை தீமை என்ற இரண்டுமே கிட்டியது. கடந்த 75 வருடங்களில் என்ன செய்தோம் என்று இன்று சிலர் கேட்கின்றனர்.
நாங்கள் என்ன சொன்னோம், செய்தோம் என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். அன்றைய அரசாங்கங்கள் இந்த நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தின. நல்லதை போன்றே அவதூறுகளையும் ஏற்றுக்கொண்டோம். சில கட்சியினரை போன்று நாங்கள் வரலாறுகளை மறப்பதில்லை. எமது வரலாறு ஒரு இடத்திலும் வெறுமையானதாகவும் காணப்படவில்லை.
நாங்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் எப்போதும் நாட்டைப் பற்றியே சிந்தித்தோம். 2022இல் நாட்டைப் பற்றியே சிந்தித்து செயற்பட்டோம். பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருக்கவில்லை. ஒருபுறம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன் பிறகு என்ன நடந்தது? எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று அனுர திஸாநாயக்கவும் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. இருவரும் ஓடிவிட்டார்கள்.
ஆனால் நாங்கள் ஒன்றுபட்டு ஆட்சி அமைத்தோம். 2022 ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். அதன்பிறகு, நாட்டுக்கு தலைவர் இருக்கவில்லை. நாட்டில் அராஜக நிலை உக்கிரமடைந்து காணப்பட்டது. அன்று நாட்டுக்காக ஒன்றுபட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஒன்றாக சேர்ந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றினோம். நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதால் தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய நிலை உருவாகியுள்ளது. நாங்கள் நாட்டை கட்டியெழுப்புவோம், பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று யாரும் நினைக்கவில்லை. ஓரிரு மாதங்களில் போதுமான வளர்ச்சியை ஏற்படுத்த எங்களால் முடிந்தது. அதற்காக ஒன்றுபட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கிறேன். நீங்கள் அனைவரும் கட்சியையும் பாதுகாத்துக்கொண்டு, ஒற்றுமையாக எனக்கு ஆதரவளித்தீர்கள்.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினோம். தற்போது நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிற்காக அர்பணிப்புடன் செயற்படத் தயாராக இருக்கிறோம். சிலர் நாட்டைப் பற்றி பேசினாலும் தங்களது சுயநலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். நாங்கள் நாட்டைப் பற்றி பேசுகிறோம், நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். தற்போதைய எமது போராட்டமும் புதிய இலங்கையை உருவாக்குவதற்கானதாகும்.
நாட்டுக்காக அரசியல் கட்சிகளாக ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை காண்பித்துள்ளோம். அந்த மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம். இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கவே அந்த போராட்டத்தை நாங்கள் செய்கிறோம். இந்த நாடு எப்போதும் பிச்சை எடுக்கும் நாடாக இருக்க முடியாது. அந்நியச் செலாவணியை எப்போதும் பிற நாடுகளிடம் கோர முடியாது. நமக்குத் தேவையான பணத்தைக் தேடிக்கொள்ள வேண்டும். நாட்டில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அந்த பொருளாதாரத்தினூடாக இந்நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும்.
விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஏற்கனவே கிராமங்களை சென்றடைந்துள்ளது. அதன் பரீட்சார்த்த பணிகளை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். மேலும், சுற்றுலாத்துறை மேம்பாட்டையும் கிராமங்கள் வரையில் கொண்டுச் செல்வோம். சுற்றுலா பயணிகளின் வருகையும் இரட்டிப்பாகும். இதனால் கிராமங்களுக்கும் பணம் வந்து சேரும். சூரிய சக்தி மின் உற்பத்தியையும் கிராமங்களுக்கு கொண்டுச் செல்வோம். இவற்றோடு புதிய முதலீட்டு வலயங்களையும் உருவாக்கி நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வோம்.
20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமை வழங்குவோம்.கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமை வழங்கப்படுகிறது. லயன் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் கிராமங்களாக மாற்றப்படவுள்ளன. இந்த செயற்பாடுகள் இந்த நாட்டில் முதன்முறையாக செய்யப்படுகிறது. அதனை புரட்சிகள் என்றே கூற வேண்டும். அஸ்வெசும திட்டமும் புரட்சிகரமானது.
பழைய டெலிபோனும் திசைகாட்டியும் நாட்டுக்கு என்ன செய்துள்ளன? ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளின் வாக்குகளை திருடச் சென்று, அந்த தருணத்திலேயே மாட்டிக்கொண்டுள்ளது. அவர்களால் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் பொருத்தமானதல்ல.
மேலும் ஜேவிபி கடந்த காலத்தை மறந்த கட்சியாகும். கடந்த காலத்தை அறியாமல் எதிர்காலத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள். அவர்களின் நாட்காட்டியில் 1971 ஆம் ஆண்டு இல்லை. முடிந்தால், அவர்களுக்கு 1971 என்று ஒரு வருடம் இருந்தது என்பதை காட்டுங்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களை அபிவிருத்தி செய்வோம். சிலர் கட்சிகளைப் பற்றி பேசுகிறார்கள் ஆனால் இளைஞர்களைப் பற்றி பேசுவதில்லை. நாங்கள் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல். நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வருதல்.
மேலும் 50000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்காக நிவாரணம் வழங்குதல், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தொழில் பயிற்சி வழங்குதல், வெளிநாடுகளிலும் சுகாதாரத் துறையில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை கண்டறிந்து அவற்றை நோக்கி செல்ல இளைஞர்களை வழிநடத்துதல் உள்ளிட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். இன்று எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு வரிசைகள் இல்லை. ஆனால் நான் உருவாக்கிய ஒரே வரிசை செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லப்போகும் வரிசை மட்டும்தான்
இந்தப் பயணத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அப்போது நாங்கள் அரசியல் ரீதியாக எதிர் தரப்பினராக இருந்தாலும், எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது. சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் சகலரையும் நாம் அறிவோம்.
சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். முன்னோக்கிச் சென்று நல்ல பிரதிபலன்களை நாட்டுக்குக் காட்டுவோம். நாங்கள் ஒருபோதும் ஓடவில்லை. பிரச்சினைகளுக்கு துணிச்சலாக முகம்கொடுத்தோம். எதிர்காலத்திலும் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுத்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். வெற்றி பெறுவோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா –
ரணில் விக்ரமசிங்கவை நான் 1989 இல் இருந்து அறிவேன். எங்களுக்கிடையில் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அ நானும் அவரை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் நாடு வீழ்ந்தபோது, நான் அவரை பாராளுமன்றத்தில் மின்தூக்கிக் கருகில் சந்தித்தேன். அனைத்துக் கட்சி மாநாடு நடத்தி, நாடு வீழ்ந்தபோது தலைமைப் பொறுப்பை ஏற்க பொருத்தமான ஒருவரைத் தேடலாம் என்று கூறினார். அந்த அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அவர் வருகை தந்தார். நீங்கள் பதவிக்குப் பின்னால் செல்லும் நபரல்ல. மேலும் அவர் குடும்பத்திற்காக செயற்படும் அரசியல்வாதியுமல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது.நாட்டின் நலனுக்காக நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என மத்திய குழுவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற நடைமுறைச்சாத்தியமான தீர்மானத்தை நாம் எடுத்தோம். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டுக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவர்களது கட்சியினர் தமக்கு எதிரான தரப்பினரின் வீடுகளை எரிக்க காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. சஜித் கிளிப்பிள்ளை போல் பேசுகிறார்.நாடுபூராவும் சென்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான அமைச்சர் மஹிந்த அமரவீர:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக சவால்களை எதிர்கொண்ட கட்சியாகும். நாட்டுக்காக எப்போதும் முன்னிற்கும் கட்சியாகும். கடந்த இரண்டு வருடங்களில் நாம் நாட்டு நலனுக்காக செயற்பட்டோம். சவாலான நேரத்தில் எதிர்க்கட்சிகள் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. அப்போது தனியொரு எம்.பியாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவருக்கு ஆதரவளிக்க பல கட்சிகள் முன்வந்தன.
உரம் இன்றி வீதிக்கு வந்து போராடிய விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்தார். எதிர்க்கட்சியினர் இதனை சீர்குலைக்க முயன்றனர். ஆனால் முதல் திட்டமாக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசின் திட்டத்தை நம்பி விவசாயிகள் நாட்டிற்கு அரிசியை வழங்கப் பாடுபட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று சரியான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டு மக்கள் மருந்தின்றி செத்து மடிந்திருப்பார்கள். பால் மா இல்லாமல் குழந்தைகள் இறந்திருக்கும்.அன்றைக்கு எண்ணெய் கியூவில் இருந்தவர்களிடம் அதிக விலைக்கு எண்ணெய் விற்றவர்கள் இன்று திசைகாட்டிக்கு ஆதரவு செலுத்துகிறார்கள். திசைகாட்டி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும். எண்ணெய் வரிசைகள் மீண்டும் வரும். அப்போதுதான் இவர்களால் அதிக விலைக்கு எண்ணெய் விற்க முடியும். எனவே இனி எந்த பரீட்சார்த்த முயற்சியும் செய்ய முடியாது. விடுதலைப் புலிகள் அமைப்பும் ஜே.வி.பியும் தான் இந்த நாட்டை அழித்தன. அவர்கள் செய்த அழிவினால் தான் கடன் வாங்க வேண்டியதாயிற்று.
சந்திரிகா ஆட்சியில் அமைச்சராக இருந்த அனுரகுமார திஸாநாயக்கவிடம் பத்தாயிரம் குளங்கள் நிர்மாணிக்கும் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. குறைந்தது பத்து குளங்களைக் கூட அவர் கட்டவில்லை. ஆனால் சுவரொட்டிகள், பேனர்கள் என்பவற்றுக்கு அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டன. அன்று டபிள்கெப்பில் சென்றார்கள். இன்று சொகுசு கார்களில் செல்கின்றனர். இவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் பற்றி எதுவும் தெரியாது விவசாய அமைச்சராக தோல்வியடைந்தவர் அனுர திஸாநாயக்க.தோல்வியடைந்த வீடமைப்பு அமைச்சரான சஜித்திடம் நாட்டை ஒப்படைத்து மீண்டும் நாட்டை அழிக்க வேண்டுமா? எமது நாட்டு மக்கள் நன்றிக் கடன் மறக்க மாட்டார்கள் ” என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே சவால்களை எதிர்கொண்டுள்ளது . கட்சியின் ஸ்தாபகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க கொல்லப்பட்டார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்தப் பயணத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல தடைகளை எதிர்கொண்டது.
ஆனால் அந்த சவால்கள் அனைத்தையும் எங்களால் வெற்றிகரமாக வென்றெடுக்க முடிந்தது. அண்மைக் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டது. ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அந்த நெருக்கடிகள் அனைத்தையும் தீர்த்து வைக்க முடிகிறது.
மேலும் எங்களிடம் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் எமது கட்சியைச் சுற்றி ஒன்று சேர்ந்து வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாறு முழுவதும் காலத்தின் தேவையை நிறைவேற்றிய கட்சியாகும். தேசிய பிரச்சினைகளில் கட்சி நிறங்களை ஒதுக்கி வைத்து எமது கடமையை செய்துள்ளோம்.
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் கட்சி பேதங்களை மறந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. அந்த ஆதரவை வழங்குவதே தற்போதைய நிலையில் சரியானது. எமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் கூற வேண்டும்” என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க;
இந்நாட்டு மக்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆற்றிய பங்களிப்பை புதிதாக சொல்லத் தேவையில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களான எஸ்.ஆர்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க, திருமதி.சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இந்த நாட்டுக்காக ஆற்றிய சிறந்த சேவையை இந்த தருணத்தில் நான் மரியாதையுடன் நினைவு கூருகின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது 73 வருட வரலாற்றில் இந்நாட்டின் எதிர்காலத்திற்காக ஆற்றிய பங்கையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று மற்றுமொரு வரலாற்றுத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த சவாலான நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தது. நாங்கள் ஒரு கட்சிக்காகவோ, ஒரு நபருக்காகவோ ஆதரவு வழஙங்கவில்லை. வரலாறு முழுவதும் உண்மைக்காக நின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாட்டு மக்களுக்காகவே தீர்மானங்களை எடுத்துள்ளது” என்றார்.