தோனியால், தனது மகனின் வாழ்க்கை அழிந்துவிட்டதாகவும், அவரை மன்னிக்கவே முடியாது எனவும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த காலத்தில் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் இடம்பிடித்து விளையாடினார். ஒருகட்டத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு, இந்திய அணியில் அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதற்கு தோனிதான் காரணம் எனக் கூறப்பட்டது.
இதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக, யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கின் அவ்வப்போது தோனியை மறைமுகதாகத் தாக்கிப் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர், “நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராகச் செயல்பட்டு இருக்கிறார். எல்லா விஷயமும் இப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதை என் வாழ்க்கையில் மன்னிக்கவே முடியாது. நான் இரண்டு விஷயங்களை என் வாழ்க்கையில் செய்தது இல்லை. ஒன்று, எனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன். மற்றொன்று, எனது குடும்ப உறுப்பினர்களோ அல்லது எனது குழந்தைகளோ என யாராக இருந்தாலும், எனக்கு எதிராக செயல்பட்டவர்களை நான் அணைக்கவும் மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், “தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால், நீங்கள் பெற்று எடுங்கள். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக்கூட இதற்குமுன், ’இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார்’ என கூறி இருக்கின்றனர். அவர் புற்றுநோய்க்கு எதிராக போராடி பின் மீண்டும் விளையாடியதற்காகவும். நாட்டுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்ததற்காகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
யோக்ராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையாகி நிலையில், யுவராஜ் சிங் எப்போதுமே தோனியைப் பற்றியும், இந்திய அணியில் அவர்கள் ஒன்றாக இருந்த நேரத்தைப் பற்றியும் உயர்வாகவே சொல்லியிருக்கிறார். யுவராஜ் சிங் 2000 மற்றும் 2017க்கு இடையில் இந்தியாவுக்காக 402 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் யுவராஜ் சிங்கின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, 2007இல் டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையின்போது அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.